Published : 13 Jan 2021 03:53 PM
Last Updated : 13 Jan 2021 03:53 PM
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு இன்று 16 வகை பொருட்களால் ஷோடச அபிஷேகம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் விழா கொண்டாடப்பட்டது. சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலில் உள்ள ஒரே கல்லினால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு நடைபெறும் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இரு நாட்கள் நடைபெறும் விழா நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்ச்சியான ஷோடச அபிஷேகம், மற்றும் மலர் அலங்காரம் போன்றவை கேரள பாரம்பரிய முறைப்படி இன்று நடைபெற்றது.
அதிகாலையில் ராமபிரானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேக பொருட்கள் நீலண்டசுவாமி கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முதலில் 1000 லிட்டர் பாலால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 16 வகை பொருட்களால் ஷோடச அபிஷேகம் நடைபெற்றது. சந்தனம், குங்குமம், திருநீறு, தயிர், தேன், நல்எண்ணை, தேன், களபம், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை சாறு, கரும்பு சாறு போன்ற பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. ஷோடச அபிஷேகத்தை காண சுசீந்திரம் கோயிலில் இன்று
அதிகாலையில் இருந்தே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் ஆஞ்சநேயருக்கு புஷ்பாபிசேகம் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT