Published : 13 Jan 2021 12:44 PM
Last Updated : 13 Jan 2021 12:44 PM

திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயக் கடன்களும் ரத்து: ஸ்டாலின் பேச்சு

சென்னை

திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து விவசாயக்கடன்களும் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகளின் 5 பவுன் வரை நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்று ஸ்டாலின் பேசியதாவது:

ஏழை எளிய குடும்பத்தில் பிறந்திருக்கக்கூடிய நடுத்தர குடும்பத்தில் பிறந்திருக்க கூடிய மாணவர்கள் படித்து அதற்கு பிறகு மருத்துவராக வரமுடியாத சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கி வைத்துள்ளது. அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

இதுவரை 15 பேர் வரை தற்கொலை செய்து மாண்டு போயுள்ளனர். நீட் என தனியாக தேர்வு கொண்டு வந்துள்ளனர். இது தமிழ்நாட்டுக்கு இருக்கக் கூடாது விலக்கு வேண்டும் எனச் சொல்லி தீர்மானம் கொண்டு வந்து ஆதரித்து டெல்லிக்கு அனுப்பி வைத்தோம்.

இன்னும் 4 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். நான் ஒரு உறுதியைக் கொடுக்கிறேன். எப்படி தலைவர் கருணாநிதி முதல்வராக இருக்கும் வரை நீட் உள்ளே நுழையவில்லையோ, எப்படி ஜெயலலிதா இருக்கும் வரை நீட் நுழைய முடியவில்லையோ அதேப்போன்று நாங்கள் வந்தால் நீட் தேர்வு தமிழகத்தில் இல்லாத ஒரு நிலையை உருவாக்குவோம்.

2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது தலைவர் கருணாநிதி 7000 கோடி விவசாயக்கடனை தள்ளுபடி செய்வோம் என அறிவித்தார். இலவச மின்சாரம் தந்தது போல் இதையும் துணிச்சலாக அறிவித்தார். எங்களுக்கெல்லாம் நம்பிக்கை இல்லை. ஆட்சிக்கு வந்தாயிற்று நாங்கெலெல்லாம் நம்பிக்கை இல்லாமல் அவரிடம் போய் கேட்டோம்.

ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அல்ல ரூ.7000 கோடி எப்படி கொடுக்க போகிறீர்கள் என்று கேட்டோம். கடன் வாங்கியவர்கள் பெரும்பாலும் அதிமுகவினரே அதிகம் என்று கேட்டோம். அதற்கு அவர் சொன்னார் எனக்கு கட்சிக்காரர்கள் பற்றித் தெரியாது, அவர்கள் அனைவரையும் விவசாயிகளாகப் பார்க்கிறேன் என்றார்.

அதன்பின்னர் ஆட்சியைப்பிடித்து பதவி ஏற்றார், பொதுவாக பதவி ஏற்றவுடன் கோட்டைக்குச் சென்று கையெழுத்து போடுவார்கள். ஆனால் தலைவர் முதல்வர் ஆனவுடன் பதவியேற்ற நேரு விளையாட்டரங்கிற்கே கோப்புகளை வரவழைத்து கையெழுத்து போட்டார். இவ்வாறு பல நல்ல சலுகைகளை கொண்டுவந்தார்.

இப்போதும் நான் சொல்கிறேன், விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்யச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த அரசு மறுத்து உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது. இப்போது நான் சொல்கிறேன். 4 மாதத்தில் ஆட்சிமாற்றம் வரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். சிறு விவசாயி, பெருவிவசாயி பாகுபாடின்றி ரத்து செய்யப்படும்.

விவசாயிகள் வறுமை காரணமாக தங்க நகைகளை அடமானம் வைத்து வட்டிக்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கிறார்கள், 5 பவுன் வரை கடன் வைத்துள்ளவர்கள் அத்தனை கடனையும் ரத்து செய்வோம் என்று மக்களவை தேர்தலில் சொன்னோம், அதையும் செய்வோம் ”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x