Published : 09 Jun 2014 10:34 AM
Last Updated : 09 Jun 2014 10:34 AM
துறைமுகத்தில் இருந்து மணலி சுத்திகரிப்பு நிலையத்துக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப் படும் தரை வழிக் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. சாலையில் ஆறாக ஓடிய கச்சா எண்ணெயை பொதுமக்கள் குடங்களில் சேகரித்துச் சென்றனர். வாகனங்க ளில் சென்றவர்கள், வழுக்கி விழுந்து காயமடைந்தனர்.
சென்னை துறைமுகத்துக்கு கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் கச்சா எண்ணெய், ராட்சத குழாய் மூலம் மணலியில் உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு பூமிக்கு அடியில் குழாய்கள் புதைக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் காசிமேடு எஸ்.என்.செட்டித் தெரு திடீர் நகர் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதிலிருந்து கச்சா எண்ணெய் வெளியேறி சாலையில் ஆறாக ஓடியது. சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு சாலையில் எண்ணெய் ஓடியிருந்தது.
இதை கவனிக்காமல் வாகனங்க ளில் சென்றவர்கள் வழுக்கி விழுந்தனர். இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. கச்சா எண்ணெய் வெளியேறிய தகவல் தெரிந்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குடங்கள், பக்கெட் மற்றும் கேன்களை எடுத்து வந்து எண்ணெயை சேகரித்தனர். தரையில் தேங்கியிருந்த எண்ணெயை துணி, பஞ்சு போன்ற வற்றால் உறிஞ்சி, குடங்களில் பிழிந்து சேகரித்தனர். அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸார் மற்றும் சிபிசிஎல் நிறுவன அதிகாரிகள், அங்கு கூடியிருந்த பொதுமக்களை கலைந்து போகச் செய்தனர். கச்சா எண்ணெய் சேகரிப்பில் ஈடுபட்டவர்களையும் விரட்டினர். பின்னர் எண்ணெய் வெளியேறாமல் இருக்க அருகில் உள்ள வால்வுகளை அதிகாரிகள் அடைத்தனர்.
அதைத் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி, அடைப்பை சரிசெய்தனர். ஒரு டன் கச்சா எண்ணெய் வீணாகி இருந்தது. இந்த சம்பவத்தால் காசிமேடு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. கசிந்த எண்ணெயில் தீப்பற்றி இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சாலையில் தேங்கியிருந்த எண்ணெயை அகற்றி, மணல் தூவினர்.
இதுகுறித்து காசிமேடு பகுதி மக்கள் கூறியதாவது: துறைமுகத் தில் இருந்து மணலி சுத்திகரிப்பு ஆலை வரை பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் பல இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ளது. தரைக்கு அடியில் புதைக் கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாய்கள், சுமார் 40 ஆண்டுகள் பழமையானது. ஆனால், இந்த குழாய்களின் ஆயுட்காலமே 20 ஆண்டுகள்தான்.
சில மாதங்களுக்கு முன்பும் இதேபோல் காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே குழாய் உடைந்து கச்சா எண்ணெய் வெளியேறியது. துறைமுகத்துக்கு செல்லும் கனரக வாகனங்கள் இவ்வழியே அதிக அளவு செல்வ தால் பழமையான குழாய்கள் உடைந்து விடுகின்றன. எனவே, பெரிய விபத்து ஏற் படும் முன்பு பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய் பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT