Published : 12 Jan 2021 04:38 PM
Last Updated : 12 Jan 2021 04:38 PM
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பாக, விழா முடிந்து சென்ற அமைச்சர் ஜி.பாஸ்கரனைப் பார்த்து மாணவர்கள் கோஷமிட்டனர். போலீஸார் கண்டித்ததால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
தமிழகம் முழுவதும் 2017- 18-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற 2.30 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கவில்லை. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 6,500 மாணவர்களுக்கு வழங்கவில்லை.
அவர்கள் ஏற்கெனவே பலமுறை போராட்டம் நடத்தினர். அப்போது சில மாதங்களில் லேப்டாப் தருவதாக அமைச்சர், அரசு அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
மேலும் 2017-18-ம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்களில் பலர், தற்போது கல்லூரிகளில் 3-ம் ஆண்டு படித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் எடுப்பதால் லேப்டாப் இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று திடீரென சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அந்தசமயத்தில் கதர்கிராமத் தொழில்கள் நலத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் அரசு விழா முடிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காரில் வெளியேறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அமைச்சரை பார்த்து கோஷமிட்டனர். இதையடுத்து மாணவர்களை போலீஸார் கண்டித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் மாணவிகளை தள்ளிவிட்டதால் போலீஸாரிடம் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு போலீஸார் சமரசத்தை அடுத்து மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT