Published : 12 Jan 2021 04:01 PM
Last Updated : 12 Jan 2021 04:01 PM
3 வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை அமல் படுத்தியது. 3 சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாய அமைப்புகள், விவசாயிகள் கடுமையாக போராடி வருகின்றனர். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இந்தச்சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வருகின்றன. டெல்லியில் விவசாயிகள் நடத்தும் தொடர் போராட்டம் மாதக்கணக்கில் தொடர்கிறது.
இந்தச் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன. நேற்று, இந்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் போக்கில் அதிருப்தியடைவதாக தெரிவித்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் புதிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது.
அந்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
குழு அமைத்து அந்த குழுவிடம் மத்திய அரசும், விவசாயிகளும் பேசினால்தான் தெளிவான முடிவு கிடைக்கும். நாங்கள் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறோம். வேளாண் சட்டங்கள் செல்லுபடியானதா என்பது குறித்து எங்களுக்கும் கவலை இருக்கிறது. போராட்டத்தினால் மக்களின் பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்பு, அவர்களின் உடைமைகள் குறித்தும் கவலைப்பட வேண்டியுள்ளது, பாதுகாக்க வேண்டியுள்ளது.
எங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த பிரச்சினையைத் தீர்க்கிறோம். ஆதலால், மறு உத்தரவு வரும்வரை இந்த வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதிக்கிறோம். இந்த சட்டங்களை ஆய்வுசெய்ய குழு அமைக்கிறோம். இந்த குழு நமக்கானது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்பும் அனைவரும் இந்தக் குழுவினரிடம் சென்று பேசலாம்.
இந்த குழு எந்தவிதமான உத்தரவும் பிறப்பபிக்காது, தண்டனை வழங்காது. அறிக்கையை மட்டுமே எங்களிடம் வழங்கும். நீதிமன்ற பணிகளில் ஒன்றாக இந்த குழு இயங்கும். இந்த வேளாண் சட்டங்களை இடைக்காலத் தடை விதிக்கிறோம்.
எனக் கூறி உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவு:
“திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். இது இந்தியா முழுவதும் போராடிய விவசாயிகளுக்குக் கிடைத்த வெற்றி.
அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT