Published : 12 Jan 2021 03:46 PM
Last Updated : 12 Jan 2021 03:46 PM

விஷமுள்ள பாம்புகளைக் கண்டறிவது, கையாளுவது எப்படி?- ஓசூரில் ஒரு நாள் பயிற்சி முகாம்; சென்னை பாம்புப் பண்ணை நிபுணர் குழு பங்கேற்பு

ஓசூர் வனக்கோட்டத்தில் நடைபெற்ற பாம்பு பிடித்தல் பயிற்சி முகாமில்  பாதுகாப்புடன் பாம்புகளைப் பிடிப்பது குறித்துச் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்த சென்னை பாம்புப் பண்ணை நிபணர் கணேசன். உடன் மாவட்ட வன அலுவலர் பிரபு மற்றும் பலர்.| படங்கள் - ஜோதி ரவிசுகுமார்.

ஓசூர்

ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள பாம்புகளைப் பாதுகாப்புடன் பிடிப்பது, அவற்றை ஆபத்தின்றிக் கையாளுவது மற்றும் வனப்பகுதியில் பாதுகாப்புடன் விடுவிப்பது ஆகியவை குறித்து 50 தன்னார்வலர்கள் பங்கேற்ற ஒரு நாள் பயற்சி முகாம் இன்று நடைபெற்றது. சென்னை பாம்புப் பண்ணை, ஓசூர் வனக்கோட்டம், ஓசூர் மக்கள் சங்கம் இணைந்து இந்தப் பயற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஓசூர் வட்டம் மத்திகிரியில் உள்ள ஓசூர் வனக்கோட்டம் அரங்கில் நடைபெற்ற இந்த ஒரு நாள் பயிற்சி முகாமை, மாவட்ட வன அலுவலர் பிரபு முன்னிலையில் தருமபுரி மண்டல வனப் பாதுகாவலர் தீபக் பில்கி தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் சென்னை பாம்புப் பண்ணை நிபுணர் எஸ்.ஆர்.கணேசன் தலைமையிலான குழுவினர் பங்கேற்று விஷமுள்ள பாம்புகளையும், விஷமில்லாப் பாம்புகளையும் கண்டறிந்து அவற்றைப் பாதுகாப்புடன் பிடிப்பது, பிடிக்கப்பட்ட பாம்புகளை ஆபத்தின்றி எப்படிக் கையாளுவது, பாம்புகளை வனப்பகுதிக்குக் கொண்டு சென்று பாதுகாப்புடன் விடுவிப்பது ஆகியவை குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். இந்தப் பயிற்சியில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 50 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

இந்த 50 பேரில் ஏற்கனவே பாம்பு பிடித்தலில் ஈடுபட்டுள்ள நபர்கள், ஓசூர் தொழில்பேட்டையில் உள்ள கைக்கடிகாரம் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள், தன்னார்வலர்கள் இடம் பெற்றிருந்தனர். பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபு கூறும்போது, ''நமது நாட்டில் 270 வகையான பாம்புகள் உள்ளன. இவற்றில் 60 வகையான பாம்புகள் விஷத்தன்மை உடையவை. 210 வகையான பாம்புகள் விஷத்தன்மை அற்றவையாகும். இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 46 ஆயிரம் பேர் பாம்பு கடித்து உயிரிழக்கின்றனர். பாம்புக் கடி சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், சென்னையில் உள்ள இருளர் சங்கத்தின் மூலமாகத் தயாரிக்கப்படுகின்றன.

இதில் விஷத்தன்மை உள்ள பாம்புகளான ரஸல்ஸ் வைபர், இண்டியன் கோப்ரா, காமன்கிரைட், சாஸ்கேல்டுவைபர் ஆகிய 4 வகையான பாம்புகளின் விஷத்தில் இருந்து விஷ முறிவுக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. ஓசூர் வனக்கோட்டத்தில் உள்ள ஓசூர், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் நல்ல பாம்பு, வைபர், மலைப்பாம்பு, சாரைப்பாம்பு, பச்சைப்பாம்பு உள்ளிட்ட பாம்புகள் அதிகளவில் உள்ளன. இந்தப் பகுதியில் முறையான பயிற்சி இன்றி பாம்பு பிடிப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.

அவர்களுக்கு விஷமுள்ள மற்றும் விஷமில்லாப் பாம்புகளைக் கண்டறிவது எப்படி என்பது குறித்தும், பாதுகாப்புடன் பாம்பு பிடிப்பது குறித்தும், பிடிக்கப்பட்ட பாம்புகளைப் பற்றி வனத்துறைக்குத் தகவல் அளிப்பது குறித்தும், வனத்துறையினரின் உதவியுடன் பாதுகாப்புடன் வனப்பகுதியில் பாம்புகளை விடுவிப்பது குறித்தும் முறையான பயிற்சி அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த முகாமின் முக்கிய நோக்கமாகும். கிருஷ்ணகிரியில் பாம்புகள் சரணாலயம் ஏற்படுத்தத் திட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

இந்தப் பயிற்சி முகாமில் உதவி வனக்காப்பாளர் கார்த்திகேயிணி, வனச்சரகர்கள் ஆர்.ரவி, வெங்கடாசலம், சுகுமார் உட்பட 7 வனச்சரகர்கள், ஓசூர் மக்கள் சங்கத் தலைவர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x