Published : 12 Jan 2021 02:35 PM
Last Updated : 12 Jan 2021 02:35 PM
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில், 12.8% பெண்களுக்கு மட்டுமே நிலம் இருப்பதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. 55% பெண்கள் விவசாயக் கூலிப் பெண்களாக உள்ளனர். 24% பெண்கள் விவசாயிகளாக உள்ளனர். எனினும், அதில், 12.8% பெண்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ள நிலத்தின் உரிமையாளர்களாக உள்ளனர்.
2000-2001 மற்றும் 2010-2011 இடைப்பட்ட காலத்தில், ஒரு ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் உள்ள பெண்களின் எண்ணிக்கை 11.8% என்ற விகிதத்திலிருந்து 13.6% என அதிகரித்துள்ளது.
ஆனால், விவசாய நிலத்தில் 80% வேலைகளைச் செய்பவர்களாக பெண்களே உள்ளனர். அவர்கள் ஒரு நாளின் 16 மணி நேரத்தை வீட்டு வேலைகளிலும், விவசாய நிலத்திலும் கழிக்கின்றனர். இந்த விவசாயக் கூலிப் பெண்கள் இந்த ஊரடங்கில் என்ன ஆயினர்?
சென்னையிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தின் கூட்டேரிப்பட்டு கிராமத்திற்கு இரண்டரை முதல் மூன்று மணி நேரத்தில் செல்லலாம். அங்கிருந்து 10 நிமிடப் பயண தூரத்தில் இருக்கிறது கொடிமா ஊராட்சியின் கீழ் வரும் சோழிய சொற்குளம் எனும் சிறுகிராமம்.
கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த விழுப்புரம், 30.9.1993 அன்று தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக 2019, ஜனவரி 8 அன்று அம்மாவட்டத்தை மேலும் பிரித்து கள்ளக்குறிச்சி என்ற புதிய மாவட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழக அரசு. 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பிரிக்கப்படாத விழுப்புரம் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 34 லட்சத்து 58 ஆயிரத்து 873. மாவட்டத்தின் பொருளாதாரம் மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமும் விவசாயத்தையே சார்ந்தது. குறிப்பாக, பெரும் நிலம்படைத்த விவசாயிகளைக் காண்பது அரிதிலும் அரிதாகவே இருக்கிறது. சிறு, குறு விவசாயிகளே மாவட்டத்தின் பெரும்பான்மை. நெல், நிலக்கடலை பிரதான பயிர்கள். பெரும்பாலும் கிணற்று நீர் பாசனம்தான்; எனவே, மழையை நம்பித்தான் விவசாயம்.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்குக் கொத்தடிமைகளாக செங்கற்சூளைகளில் வேலை பார்ப்பவர்களும் உள்ளனர். அவர்கள் வருடத்தின் 6 மாதங்கள் தங்கள் வீடுகளிலேயே மண்பாண்டங்கள் செய்து விற்பனை செய்கின்றனர். அடுத்த 6 மாதங்கள் கொத்தடிமைகளாக செங்கற்சூளைகளில் வேலை செய்கின்றனர்.
2017-ம் ஆண்டு மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின்படி, 2004-05 முதல் 2011-2012 காலக்கட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி விகிதம் மாநிலத்தின் வளர்ச்சி விகிதத்தைவிட 20 சதவீதம் குறைவு. கல்வி விகிதம் 2011-ம் ஆண்டின் புள்ளிவிவரத்தின்படி, 71.9 சதவீதமாக இருக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 10.15 லட்சம் பட்டியலின மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 9.24 லட்சம் பேர் மாவட்டத்தின் கிராமங்களிலும், 91 ஆயிரம் பேர் மாவட்டத்தின் நகர்ப்புறங்களிலும் வசிக்கின்றனர். பட்டியலின மக்களில் 91% மக்கள் கிராமங்களில் இருக்கின்றனர் என்பது இம்மாவட்டத்தின் சமூகச் சூழலைப் புரிந்துகொள்வதற்கான எளிய புள்ளிவிவரம்.
இந்தக் கள ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட சோழியசொற்குளம் அமைந்துள்ள கொடிமா ஊராட்சி, மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. அவ்வொன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1.17 லட்சம். இதில் 42.3 ஆயிரம் பேர், சுமார் 36% பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
விழுப்புரம் மாவட்டத்திற்கே உரிய அம்சங்கள் அனைத்தையும் பிரதிபலிக்கிறது சோழியசொற்குளம். கொடிமா ஊராட்சிக்குள் சோழியசொற்குளம் ஓர் 'ஆம்லெட் வில்லேஜ்'. கிளை பஞ்சாயத்தைத்தான், 'ஆம்லெட் வில்லேஜ்' என்கிறார்கள் மக்கள்.
விதைப்பது, டிராக்டர் ஓட்டுதல், உரம் போடுவது ஆகியவை ஆண்களின் வேலை. களையெடுத்தல், அறுவடை செய்வது ஆகியவை பெண்களின் வேலை. சோழியசொற்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆண்களுக்கு ஒரு நாள் விவசாயக் கூலி 500 ரூ., பெண்களுக்கு 100 ரூ. இந்த ஆண்டு உயர்த்தப்பட்ட 10 ரூபாயால்தான் பெண்களுக்கான கூலி 100 ரூபாய் ஆகியுள்ளது. கடந்த ஆண்டுவரை விவசாயக் கூலிப் பெண்களின் வருமானம் 80-90 ரூபாய் என்றளவில்தான் இருந்தது.
பெண்கள் 10 மணிக்கு வேலைக்கு வந்தால் 2 மணி வரை வேலை செய்வார்கள். ஆண்கள் 9 மணியிலிருந்து 1 மணி வரை வேலை செய்கிறார்கள். அரை ஏக்கர் முதல் 4-5 ஏக்கர் வரை விவசாய நிலம் வைத்திருப்பவர்களே அதிகம். பெரும்பான்மையான கிராமங்களைப் போல நிலம் வைத்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவும், நிலமில்லாத விவசாயக் கூலிகளாக தலித் மக்களும் உள்ளனர். எனினும், சொந்த நிலம் வைத்திருந்தாலும் வறட்சி, பொருளாதாரச் சூழல் உள்ளிட்ட காரணங்களுக்காக மற்றவர்கள் நிலத்தில் வேலை செய்யும் 'நிலமுள்ள கூலிகள்' இக்கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ளது கவனிக்கத்தக்கது. சொந்த நிலம் வைத்திருந்தாலும் இன்னும் ஓலைவீடுகள்தான் அதிகம் தென்படுகின்றன.
நிலமுள்ள கூலிகள்
சொந்த நிலம் ஒருபுறம், ஓலைவீடும், கூலி வாழ்வும் ஒருபுறம் என இருக்கும் இம்மக்களை ஊரடங்கு என்ன செய்துள்ளது?
"ஊரடங்குன்னு டிவில நியூஸ் பார்த்துத்தான் தெரிந்துகொண்டோம். உரம், மருந்து வாங்க முடியாமல் பயிர் நாசமாகிவிட்டது. மிளகாய் பயிர் சரியான நேரத்தில் அறுவடை செய்ய முடியாமல் கருகிப் போய்விட்டது. எள் ஒரு ஏக்கர் அப்படியே நாசமாகிவிட்டது. குறிப்பாக, நிறைய பூ விவசாயிகள் ரொம்பக் கஷ்டப்பட்டனர். பூ விவசாயிகள், மல்லி, குண்டுமல்லி, கனகாம்பரம் ஆகியவற்றை அதிகமாகப் பயிரிட்டனர். அந்தப் பூக்களை வைத்துக்கொண்டு எங்கும் செல்ல முடியவில்லை. பூவை எடுத்துப் போய்விட்டு ரோட்டிலேயே கொட்டிவிட்டு வருவார்கள்.
சில பேர் மிளகாய் பயிரிட்டிருந்தனர். அதற்கு மருந்து வாங்க முடியாமல் வீணாகிடுச்சு. ஊரடங்கு சமயத்தில் அறுவடை செய்வதற்குப் பெண் விவசாயக் கூலிகள் பயந்துகொண்டே வந்தனர். தெரியாமல் கூட்டிக்கொண்டு வந்து வேலை செய்தோம்" என, ஊரடங்கு விளைவுகளைக் கூறுகிறார் சோழியசொற்குளத்தின் விவசாயப் பெண்மணியான மலர்.
ஊரடங்குக்குப் பிறகு ரூ.50 ஆயிரம் கடன் பெற்று தன் 4 ஏக்கர் நிலத்தில் உளுந்து பயிரிட்டிருந்தார் மலர். பிப்ரவரி - மார்ச் மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும் நிலையில், அதுவும் 'நிவர்' புயல் மற்றும் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் நாசமாகி, மலரின் வாழ்வில் பேரிடியாக இறங்கியிருக்கிறது.
மலருக்கு (வயது 39) அம்மா - அப்பா கிடையாது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் தாய் பச்சையம்மாள், தேள் கொட்டியதில் இறந்துவிட்டார். தந்தை கோபால் நெஞ்சுவலியால் இறந்துவிட்டார். 12-ம் வகுப்பு முடித்திருக்கும் மலர் வசிப்பது சிறிய ஓட்டு வீடு. வீட்டின் பின்புறம் 4 ஏக்கர் நிலம், வீட்டிலிருந்து அரை கி.மீ. தூரம் சென்றால் இன்னும் 2 ஏக்கர் நிலம். மலரின் தந்தைக்குச் சொந்தமான விவசாய நிலம் இவை.
விவசாயத்தின் அத்தனை லாவகங்களையும், நுணுக்கங்களையும் அறிந்திருக்கும் மலருக்குக் களை எடுப்பது, கூலியாட்களுக்கு உணவு செய்வது என சம்பளமில்லா உழைப்பைக் கோரும் அலுப்புமிக்க பணிகள் யாவும் அன்றாடப் பொறுப்புகள். மலருக்கு ஒரேயொரு அண்ணன் சண்முகம். அவர் மாற்றுத்திறனாளி. பக்கத்திலேயே பெரியப்பா வீடு. அவரது அண்ணன், அன்றாடக் கூலி வேலைகளுக்குச் செல்கிறார். விவசாயத்தையும் கவனித்துக்கொள்கிறார். ஊரடங்கினால் வேறு வேலைகளின்றி அவரும் பெரிதும் சிரமப்பட்டிருக்கிறார்.
மலருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தன் திருமணத்தை நடத்தும் முயற்சியில் இன்னமும் ஈடுபடாமல் இருக்கும் அண்ணன் மீது மலருக்கு வருத்தம் உள்ளது. ஊரடங்கில் பல நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் சிக்கனத் திருமணத்தை முடித்துக்கொண்டிருக்க, மலர் போன்ற பெண்களின் திருமணக் கனவு ஊரடங்கு தளர்வுகளைப் போலவே முடிவற்றுச் சென்றுகொண்டிருக்கிறது. துணை இல்லாத தனிமை வாழ்வோடு விவசாய நிலத்தில் போராடிக் கொண்டிருந்தவரை நோக்கி, ஊரடங்கு தனிமையைப் பரிசாக நீட்டியிருக்கிறது கரோனா.
"இந்த நிலம் எல்லாமே அம்மா - அப்பா சம்பாதித்ததுதான். எதுவும் எங்களுடையது இல்லை. அம்மாவும், அப்பாவும் இருக்கும்போது நெல், மிளகாய் பயிரிட்டிருக்கிறார்கள். அதன்பிறகு கிணறு தூர்ந்துவிட்டதால், அதை விட்டாச்சு. அப்படியே விட்டதால் முள் முளைத்துக் காடாகிவிட்டது. கரோனா ஊரடங்கு காலத்தில்தான் வேறு வழியில்லாமல் இந்த நிலத்தைச் சீர்செய்தோம்" என்கிற மலரின் நிலைமை, சம்பாத்தியத்துக்கு எந்த வழியுமே இல்லாத நிலையில் நிலத்தை நம்பி மீண்டும் திரும்பியிருக்கும் பெரும்பான்மையினரின் எதார்த்த வாழ்க்கை என்பதைச் சிந்திக்க வைக்கிறது.
ஏப்ரல் தொடக்கத்திலேயே ஊரடங்கு கட்டுப்பாடுகளிலிருந்து விவசாயப் பணிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. விளைபொருட்களைப் பாதுகாத்துச் சேமித்திடக் கிடங்கு வசதி, பொருளீட்டுக் கடன் வசதி, காய்கறிகள் மற்றும் பழங்களைக் குளிர்பதனக் கிடங்குகளில் பாதுகாத்திட கட்டணம் முழுவதும் ரத்து, சந்தைக் கட்டண விலக்கு ஆகியவற்றை அரசு அறிவித்திருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மலர் அப்படி பாதிக்கப்பட்டவரில் ஒருவர்.
"முழு ஊரடங்கால் போக்குவரத்து இல்லை. மார்ச்சில் அறுவடை செய்த காராமணியை, மே மாதம்தான் விக்கிரவாண்டி விற்பனைக் கூடத்திற்கு எடுத்துச் செல்ல முடிந்தது. இதனால் ஒவ்வொரு மூட்டைக்கும் காராமணி ரூ.3,000 விலை குறைந்துவிட்டது. அந்தப் பணமும் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் எங்களுக்குக் கிடைத்தது. உளுந்து 100 கிலோ அடங்கிய மூட்டை ரூ.7,000-க்குதான் கொள்முதல் செய்தனர். கம்பு விற்பனை செய்ததற்கு ரூ.16 ஆயிரத்தை 1 மாதம் கழித்துதான் கொடுத்தனர். முன்பெல்லாம் 15 நாட்களிலேயே கையில் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். வங்கிக் கணக்கில் செலுத்துவதால், பணம் வருவதற்கு இப்போது மாதக் கணக்கில் ஆகிவிடுகிறது" என, வருத்தம் தோய்ந்த கண்களுடன் கூறுகிறார், மலர்.
உள்ளூர் வர்த்தகத்துக்குள்ளேயே நடக்கும் இந்த வர்த்தக பாக்கிகள், திறந்த சந்தை நோக்குடன் ஊரடங்கு காலத்தில் அறிவிக்கப்பட்ட புதிய வேளாண் சட்டத் திருத்தங்களைக் குறித்து நம்மை ஆழமாகச் சிந்திக்க வைக்கின்றன.
விலையில்லா வண்ணத் தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவையே வீட்டின் அத்தியாவசிய மின்சாதனப் பொருட்கள். கொடுத்துப் பல வருடங்களாகி விட்டதால், அவை செயலற்றுக் கிடக்கின்றன. பாதி கலராகவும், மீதி கருப்பு - வெள்ளையாகவும் தெரியும் அந்த டிவிதான் மலரின் ஒரே பொழுதுபோக்கு. அதில், எப்போதும் ஏதேனும் ஒரு சீரியல் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஊரடங்கு என்று இல்லை, பொதுவாகவே ரேஷன் அரிசிதான் அன்றாட உணவு. பெரும்பாலான நேரங்களில் ரேஷன் அரிசி சாப்பிட ஏற்றதாக இருக்கும் என்று கூறும் மலர், சில சமயங்களில் மஞ்சள் நிறத்தில் சாப்பிட ஒவ்வாததாக இருக்கும் என்கிறார். ஏப்ரல் முதல் ஜூலை வரை இலவசமாக வழங்கப்பட்ட ரேஷன் பொருட்கள் ஆகஸ்ட் முதல் மீண்டும் காசுக்குக் கொடுக்கப்பட்டது.
"அரசு கொடுத்த எல்லாமே ரிப்பேர் ஆகிவிட்டது. ஊரடங்குல எல்லாரும் வீட்ல இருக்குறதால, எல்லார் துணியையும் கையில துவைக்கிறது ரொம்பக் கஷ்டம். வாஷிங் மெஷினுக்குலாம் நம்ம ஆசைப்பட முடியுமா? முன்பு மூன்று வேளையில் ஒரு வேளை கடையில் அரிசி வாங்கி, குழம்பு வைத்து சாப்பிடுவோம். அப்பப்ப பருப்பு, வாரத்துக்கு ஒரு ஒன்னு, ரெண்டு தடவ மீன், கறி சேத்துக்குவோம். இப்ப அதெல்லாம் இல்ல. தினமும் ரேஷன் அரிசிதான். காய்கறி கூட வாங்க முடியாமல் கஞ்சி வைத்துச் சாப்பிட்டோம். இங்க எல்லாருடைய வீட்டிலும் முருங்கைக்கீரை இருக்கும். சிலநேரம் அதில் கொஞ்சம் பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டுவிடுவோம். ஊரடங்கின் ஆரம்பத்தில் ஏப்ரல் மாசம் மட்டும் தமிழக அரசு ரூ.1,000 தந்தது. ஒரு கடைக்கு 1,000 எடுத்துட்டுப் போனால் என்ன வாங்க முடியும்? கடைசியாக இருந்த ஒரு கிராம் கம்மலையும் அடகு வைத்துவிட்டோம்", எனக்கூறும் மலரின் வீட்டில் அன்றைய மதியச் சாப்பாடு ரேஷன் அரிசி, முருங்கை சாம்பார்தான்.
மலரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் லதா (45) - புவனேஸ்வரி (33) இருவரும் சகோதரிகள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் - தம்பியைத் திருமணம் செய்து கொண்டனர்.
"அண்ணன் - தம்பி நிலம் என்பதால் இருக்கும் 4 ஏக்கர் நிலத்தில் ஒன்றாகத்தான் பயிர் வைத்திருக்கிறோம். நானும் தங்கையும்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஊரடங்கு சமயத்தில் மல்லாட்டை, மிளகாய் போட்டிருந்தோம். போக்குவரத்து இல்லை. அறுவடை செய்ய ஆள் இல்லை. அறுவடை செய்யாமல் அப்படியே காஞ்சிபோயிருச்சி. 40 மூட்டைகள் விளையும் சமயத்தில், இப்போது 6 மூட்டைகள்தான் வந்தன. இப்போது எதுவும் போடவில்லை. பூவும் தண்ணி இல்லாமல், மருந்து போடாமல் கருகிவிட்டது. பூ, மல்லாட்டை சேர்த்து 30 ஆயிரம் செலவு செய்திருப்போம். எங்க உழைப்பைச் சேர்க்காமல் இதைச் சொல்றேன். நம்ம உழைப்பெல்லாம் கணக்குப்பண்ணா அந்த செலவுத்தொகை எங்கயோ போய் நிற்கும். நம்ம நிலத்துல வேலை பாக்குறதுக்கு எப்படி நம்ம காசு பார்க்க முடியும்? எல்லாம் கஷ்டம்தான். ஒரு வருடம் ஆகப்போகுது. வேலை இல்லை. எல்லோரும் வீட்டில்தான் உட்காந்திருக்கோம். காதுல கம்மல் இல்லாத உக்காந்துருக்கோம். இருந்த 2 கிராம் தங்க கம்மலயும் அடகு வச்சிட்டோம்" என்கிறார், லதா.
"எங்க வூட்டுக்காரருக்கு கால்ல ஆணி குத்தி நடக்க முடியாம ஆகிடுச்சி. கொஞ்ச வருஷமாவே இப்படித்தான். வீட்டு வேலை, விவசாய வேலை எல்லாத்தையும் நான்தான் பாத்துக்குறன். எனக்கு ஒரேயொரு மகன், பேரு கண்ணன். பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருக்கிறான். மேற்கொண்டு படிக்க வைக்கச் சொன்னான். எங்களால் படிக்க வைக்க முடியவில்லை. பாண்டிலதான் (புதுச்சேரி) ஜிப்மர் ஹாஸ்பிட்டல்ல ஒப்பந்த வேலையில செக்யூரிட்டியா இருக்கான். நிரந்தர வேலை கிடைக்க 1-2 லட்சம் செலவாகும்னு சொல்றாங்க. கரோனா சமயத்தில யாராவது காசு வாங்கி ஏமாத்திட்டாங்கன்னா? அதான், எதுவும் பண்ண முடியல. பிஎஸ்சி படிச்சிட்டு செக்யூரிட்டியா இருக்கான். ஒரு மாசம் நாள் தவறாமப் போனா அவனுக்கு ரூ.15 ஆயிரம் வரும். இல்லையென்றால், 10-12 ஆயிரம் ரூபாய் வரும். ஜிப்மர்ல கரோனா வார்டு இருக்கதால பயந்துகிட்டு அவன ஊரடங்குல இருந்து வேலைக்கு அனுப்பல. வீட்லதான் இருக்கான். இப்ப என்னா வேலைக்குப் போவான்? என்னா வேலை இருக்கு? சும்மா நம்மளோட உக்காந்துகிட்டு சாப்பிட்டுட்டு இருக்கான்", எனப் படபடவென பேசி முடித்தார், லதா.
சற்று நேரத்தில் 100 நாள் வேலைக்குச் சென்றிருந்த லதாவின் சகோதரி புவனேஸ்வரி, இன்னும் சில பெண்களை அழைத்துக்கொண்டு நாங்கள் அமர்ந்திருந்த அவர்களின் வீட்டுக்கு வந்தார்.
"கரோனா முடியுற வரைக்கும் ரேஷனில் பொருட்களாவது இலவசமாப் போட்ருக்கலாம். அதுவும் இல்ல. ரெண்டு மாசத்துலயே காசு வாங்க ஆரம்பிச்சுட்டாங்க. சிலர் வீட்ல ஆம்பளயும் கஷ்டத்தப் பாப்பாங்க. ஆனா, எல்லார் வீட்லயும் பொம்பளைங்கதான் இதுலாம் பார்க்கணும். ஆண்களுக்குச் சுத்தமாக வேலை இல்லை. விவசாயம் பாக்குறவங்களுக்குன்னு வட்டி இல்லாம கடன் கொடுத்திருக்கலாம். குறைந்த வட்டியிலாவது கடன் கொடுத்திருக்கலாம். தாலியில் உள்ள குண்டுமணியை விற்றவர்களும் உள்ளனர். இது கவுரவப் பிரச்சினை. யாரும் என்னென்ன அடகு வச்சிருக்கோம்னு கூட வெளிய சொல்லமாட்டோம். பாத்தியா, குண்டுமணிய கூட வித்துருக்கான்னு நம்ம அப்படி போனதும் பேசுவாங்க. அதனால யாரும் இதுலாம் அடகு வச்சத சொல்ல மாட்டாங்க" என்கிறார், 33 வயதான புவனேஸ்வரி.
புவனேஸ்வரியுடன் வந்த 39 வயதான மல்லிகா, "4 ஏக்கர் நிலம் இருக்கு. ஆனா, ஏரி வேலை (100 நாள் வேலை) செஞ்சாதான் எங்களுக்குச் சோறு. எங்க வீட்டு ஆண்கள் கலெக்டர் வேலையா செய்றாங்க. எல்லாரும் கூலி வேலைதான் செய்றாங்க. கூலி வேலை செஞ்சி அதக்கொண்டு வந்து நிலத்துல போடுவோம். இப்ப விவசாயமும் சரியா இல்ல" என்கிறார்.
மல்லிகாவுக்கு பள்ளிப்படிப்புப் படிக்கும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். "எல்லாரும் ஆன்லைன்ல படிக்கிறாங்க. ஒரு போன வச்சி படிக்கிறாங்க. ஆம்பளைங்களுக்கு கரோனானால வேலையே இல்ல. நிலத்துல வச்ச பூவப் பறிக்கிறதுக்கு கூட ஆள் இல்ல. நஷ்டந்தான் எங்களுக்கு" என்ற மல்லிகாவின் அலுப்பில் பல மாதக் களைப்பு தெரிகிறது.
சோழியசொற்குளத்து மக்கள் கூட்டேரிப்பட்டு சந்தைக்குத்தான் சென்று காய்கறிகள் உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வாங்குவார்கள். அதனை ஊரடங்கு சமயத்தில் சற்று தூரம் தள்ளி மாற்றியிருக்கிறார்கள். இதனால், அக்கம்பக்கத்துக் கடைகளில் அதிக விலைக்கு பொருட்களை வாங்கும் நிலைக்கும் ஆளாகியிருக்கின்றனர்.
நிலமுள்ள கூலிப்பெண்களின் கடன் பிரச்சினைகள்
"10 ரூவா பசங்க கேட்டாக்கூட கொடுக்க முடியாது. பிஸ்கெட் வாங்கக் கொடுன்னு கேட்டா கஷ்டம்தான். சண்டை போட்டுட்டுக் கிடக்குங்க. ஸ்கூலுக்குப் போனா 10 ரூவாய்ல முடிஞ்சிரும். வீட்லயே இருக்கதால ஒன்னும் முடியாது. நாங்க வேற நிலத்துல கூலிக்கும் போவோம். 100 ரூபா தருவாங்க. வருஷத்துக்கு 10 ரூபாய் ஏத்துவாங்க. தினமும் கஞ்சி வச்சா எங்க ஊட்ல இருக்க புள்ளைங்க ஒரு நாள் குடிக்கும், மறுநாள் மூஞ்சில ஊத்திருங்க. கடனைக் கட்ட நகைய வைப்போம். கஞ்சி குடிச்சாவது கடனைக் கட்டிருவோம்.
இந்த ஊரடங்குல ஒரு மாட்டையே நாங்கள் விற்றுவிட்டோம். இந்த அளவுக்கு உடம்பு இளைச்சதே இல்ல எனக்கு. ஒழுங்கா சாப்டாம உடம்பே போச்சு. வெளியில் சொல்லாமல் இவ்வளவு கடன் வாங்கியிருக்கிறோமே. இவ்வளவு சின்ன குடும்பத்தில் 2 லட்சம் கடன் வைத்திருக்கிறோம் என்று சொன்னால் அது எங்களுக்கு அதிகம்தான். ராத்திரியில அந்த நினைப்பு தூங்கவிடாது. பகல்ல சிரிச்சி கிரிச்சிப் பேசிட்டு இருப்போம். அரசாங்கம் எங்களுக்கு அரை பைசா வட்டியில் கடன் வழங்க வேண்டும்", என அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறார் லதா.
"நிலம் வச்சிருக்க யார்கிட்டயும் காசு இல்ல. 100 நாள் வேலைக்கு போய்தான் எனக்கு காசு வந்தது. இந்த வாரம் ஒரு குழு என்றால், மறு வாரம் வேறொரு குழு என 100 நாள் வேலைக்குச் செல்வார்கள். வாரம் 6 நாட்கள் வேலை. ஆனால், இப்போது 5 நாட்கள்தான் வேலை தருகிறார்கள். கரோனாவுக்கு முன்பு 3 நாட்கள்தான் வேலை தருவார்கள். ஒரு நாளைக்கு 140 ரூபாய் தருவார்கள். விவசாயக் கடன் ஏதாவது கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்கிறார், மலர்.
சாப்பாட்டு இடைவேளைக்காக 100 நாள் வேலையிலிருந்து வந்தவர்கள் ஊரடங்கால் ஏற்பட்ட குடும்பப் பொருளாதார இழப்புகளைக் கூறினர். பெரும்பாலான பெண்கள் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கின்றனர். சிலர் கையெழுத்து போடுவதற்கு மட்டும் தங்கள் பிள்ளைகளிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கின்றனர். 50 வயதை நெருங்கிய குணபுஷ்பா ஊரடங்கு தாக்கத்தால் பூ விவசாயிகள் பட்ட துன்பங்களைப் பகிர்ந்துகொண்டார்.
"காசு இருக்கவங்க காசு கொடுத்து விளைஞ்ச பூவைப் போய் கொட்டுனாங்க. எங்களால அதுகூட முடியல. அப்டியே விட்டுட்டோம். திண்டிவனத்துல பூச்சந்தை இருக்கு. அங்க போய் விக்க முடியல. அதனால மறைஞ்சி மறைஞ்சி 30-40 ரூபாய்க்கு வித்தாங்க. பூவ எடுக்காமயும் விடக்கூடாது. செடி வேஸ்ட்டா போயிடும். வாசனைக்கு எல்லா பூச்சியும் வந்து அண்டும். பூவைப் பொறுத்தவரை மாசம் மாசம் காசு பார்க்கலாம். வாரத்துக்கு 4 மருந்து அடிக்கணும். எங்களுக்கு ஒன்னே கால் ஏக்கர் இருக்கிறது. ஊரடங்குல விற்பனை செய்ய முடியாம எங்களுக்கு 2 லட்சம் நஷ்டம்", என்கிறார், குணபுஷ்பா.
ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள குணபுஷ்பா, ஊரடங்கால் சரிவர மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல், உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகியிருக்கிறார்.
"இருக்கின்ற சொச்ச பணமும், உணவுக்கே சரியா இருக்கு. எப்போதும், ஜிபம்ரில் தான் சுகருக்கு மாத்திரை வாங்குவேன், கரோனா வார்டு இருப்பதால், அங்கு பயந்து போகாமல் பக்கத்துலயே இப்ப பார்த்துக்கிட்டு இருக்கோம். சுகர் இருக்கு. ஆனா, இருக்க காசுல எங்க நல்ல பொருள் சாப்பிட முடியுமா? ஒரு லிட்டர் எண்ண 150 ரூவா. 5 நாள்தான் அத வச்சி ஒட்ட முடியும். பழக்கத்துல இருக்கவங்ககிட்ட கடன் வாங்குவோம். கடன் வாங்கிட்டு அதப் பொதுவுல சொல்றதில்ல" எனும் குணபுஷ்பாவின் குரலில் சோழியசொற்குளத்தின் வாழ்வாதாரப் பண்பாடு பளிச்செனத் தெரிகிறது.
பூக்கள் விவசாயம் செய்துவரும் 34 வயதான கோமதியிடம் கணவர் என்ன வேலை செய்கிறார் எனக் கேட்டால், 'பேங்க்ல வேலை செய்றா'ருன்னு கிண்டலாகச் சொல்லிச் சிரிக்கிறார்.
"இங்க எல்லா ஆண்களும் விவசாயம்தான். ரொம்பக் குறைவாதான் கூலிவேலை, புதுச்சேரியில ஏதாவது வேலைக்குப் போவாங்க. அந்த வேலையும் இப்ப இல்ல. எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கு. பூ, வெண்டை, சாமந்தி போட்டிருந்தோம். அதுக்கு முன்னாடி கரம்பாதான் (தரிசாக ) கிடந்தது. கரோனாவால எதுவுமே பண்ண முடியல. அறுவடை செய்ய முடியாம, விக்க முடியாம ஊரடங்கு சமயத்துல பூக்களைத் திருட்டுத்தனமா எடுத்துக்கிட்டுப் போயி கொட்டுனோம். மறைஞ்சி மறைஞ்சி எடுத்துட்டுப் போவோம். இப்ப ஜனங்க எங்கயும் நிகழ்ச்சிக்குலாம் போக மாட்றாங்க. அதனால எதுவும் வாங்க மாட்றாங்க. இதுல பூவ எங்க வாங்கப் போறாங்க?" என வேதனைப்படுகிறார் கோமதி.
தங்கள் வீட்டு ஆண்கள் கூலி வேலை செய்து வரும் பணத்தைச் செலவழித்து மேற்கொண்ட விவசாயம், தற்போது கரோனா ஊரடங்கால் பொய்த்துப் போயிருக்கிறது. பெரும்பாலும் இப்பகுதி பெண்கள் விவசாயக் குழுக்களில் உறுப்பினர்களாகச் சேர்ந்து கடன் பெறுகின்றனர். இல்லையென்றால், அதிக வட்டிக்கு தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று சுரண்டலுக்கு ஆளாகின்றனர். விவசாயக் குழுக்கள் மூலம் வாங்கப்படும் கடன்களால்தான் பல பெண்கள் தங்கள் குடும்பச் செலவுகளையும், விவசாயப் பணிகளுக்கான செலவுகளையும், சமாளித்து வருகின்றனர். நிலங்களில் கூலி வேலை செய்து இத்தகைய கடன்களைப் பெண்கள் அடைக்கின்றனர். அல்லி விவசாயக் குழு என்ற பெயரில் 6 ஆண்டுகளாக அப்பகுதியில் விவசாயக் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் தலைவி மலர். குழுவில் 14 பெண்கள் உள்ளனர்.
"2019-ல் கிராம வங்கியில் தலா 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினோம். மாசம் ரூ.2,800 என 20 மாதங்கள் சேர்த்து 56 ஆயிரத்து 500 செலுத்தினோம். ஊரடங்கு சமயத்துல ஒரு மாதம் மட்டும்தான் தவணையை வசூலிக்கவில்லை. தவணையைத் தள்ளிப்போட்டார்களே தவிர செலுத்த வேண்டாம் எனச் சொல்லவில்லை. கடைசியாக 308 ரூபாய் கரோனாவால் செலுத்தாததும் சேர்த்துச் செலுத்தினோம். எல்லோரும் சென்ற மாதத்திலேயே முழுக் கடனையும் செலுத்திவிட்டோம். வெளியில் 50 ஆயிரம் வாங்கினால் 3 பைசா, 4 பைசா வட்டி கேட்பார்கள். தனியார் நிதி நிறுவனங்களில் 24% வட்டி செலுத்த வேண்டும். கரோனா ஊரடங்கால் இப்போதும் வட்டி செலுத்த முடியாதவர்கள் இருக்கின்றனர்.
ஒழுங்காக செலுத்தவில்லையென்றால் திரும்பக் கடன் கேட்கும்போது எங்கள் குழுவுக்குக் கேட்டால் தர மாட்டார்கள். அதனால், மறுபடியும் வெளியில் வட்டிக்குக் கடன் வாங்கித்தான் இந்தக் கடனை அடைத்தார்கள். குழுவில் யாராவது ஒழுங்காக வட்டி கட்டாவிட்டால் பெண்களுக்குள்ளேயே சண்டை வரும். மீண்டும் சமாதானமாகிவிடுவோம். இப்போது சில வங்கிகளில் கடன் கேட்டு வருகிறோம். ஒரு வங்கி, தலா. ரூ.1 லட்சத்தை 4% வட்டியில் தருவதாகக் கூறியுள்ளது" என்கிறார், மலர்.
நிலமற்ற கூலிகள்
நிலம் வைத்திருக்கும் விவசாயப் பெண்களின் ஊரடங்கு தாக்கங்கள் இப்படியிருக்க, விவசாய நிலத்தில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்யும் பட்டியலினத்தைச் சேர்ந்த சில பெண்களிடம் பேசினேன்.
"விவசாய வேலைக்கு ஆம்பளைங்க போனா 400 ரூபா. எங்களுக்கு 100 ரூபாய்தான் வரும். இன்னைக்கு ஃபுல்லா நான் வேலை பாத்தாக்கூட பொம்பளைங்களுக்குண்டான கூலிதான் எங்களுக்குக் கொடுப்பாங்க. ஆண்கள் இரண்டு மணி நேர வேலையை 1 மணி நேரத்தில் செய்தாலும் அவர்களுக்குக் கூலி 400 ரூபாய். 6 மாதம் வேலையில்லாமல்தான் இருந்தோம். கடந்த 3 மாதங்களாகத்தான் வேலை இருக்கிறது. இன்றைக்கு வேலை கிடைக்கும். 4 நாள் கிடைக்காமல் கூட போய்விடும்" என்கிறார், அஞ்சலி தேவி.
அஞ்சலி தேவியும் விவசாயக் கூலிப் பெண்களுக்காக குழு நடத்தி வருகிறார். அதன்மூலம் பெறும் கடன், மீண்டும் அந்தக் கடனைச் செலுத்துவது என இவர்களின் நாட்கள் கழிகின்றன.
"கையெழுத்துப் போட்டால்தான் குழுவில் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. அதனால் பெயர் எழுத மட்டுமாவது பலரும் கற்றுக்கொண்டனர். விவசாய வேலைக்கு 7 மணிக்குச் சென்றால் 3-3.30-க்கு வீட்டுக்கு வருவோம். ஊரடங்கு சமயத்தில் வீட்டில் எல்லோரும் இருந்ததால் வேலைகள் அதிகமாக இருந்தன. பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டால் ஒன்றும் தெரியாது. இன்னும் விவசாய வேலைகள் ஒன்றும் கிடைக்கவில்லை. விவசாயக் கூலி வேலை செய்பவர்களுக்கென அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை", என, வேதனைப்படுகிறார், 41 வயதான சாமந்தா.
"நான் குத்தகைக்கு நிலம் எடுத்து விதைத்திருக்கிறோம். விளையுதோ இல்லையோ, எங்களுக்குப் பணம் வருதோ இல்லையோ, நிலத்தின் உரிமையாளருக்கு 2 ஏக்கருக்கு 8,000 ரூபாய் தரணும். உளுந்து, காராமணி விதைச்சிருக்கோம். ஊரடங்குல சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கிடந்தோம். எங்கவீட்ல சம்பளக்காரங்க யாரும் கிடையாது. விவசாயத்துக்குப் போனாதான் ஜீவனம். கரோனா ஆரம்பித்தபோது 1,000 ரூபாய் கொடுத்தாங்களே அதுதான். நிலம் இல்லாத நாங்கள் என்ன செய்வது?", எனக் கேள்வி எழுப்புகிறார் தமிழரசி, 38.
அரசு வங்கிகளில் கடன்கொடுக்க நிலத்தை அடமானம் வைப்பது, ஏக்கருக்கு இவ்வளவுதான் கடன் என்ற கட்டுப்பாடுகள் இருப்பதால் பெரும்பாலானவர்கள் தங்களை நம்பிக் கடன் தரும் தனியார் நிதி நிறுவனங்களிடம் (Micro finance) அதிக வட்டிக்குக் கடன் வாங்குகிறார்கள். தனியார் சிலர் குறைந்த வட்டியில் வங்கியில் கடன் வாங்கி, அந்தப் பணத்தை அதிக வட்டிக்கு வெளியில் கொடுக்கிறார்கள். இதனால் பலர் தாங்கள் யாரிடம் கடன் வாங்கியிருக்கிறோம் என்பதைக் கூட வெளியில் சொல்வதில்லை.
"கடன் வாங்குறதைச் சொன்னால் மற்றவர்களுக்கு இளக்காரமாகப் (தாழ்மை நிலை) போய்விடும்" என்கிறார் மலர்.
ஜூலை மாதத்தில் இருந்து 100 நாள் வேலைகளை அரசு தொடங்கியது. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று அபாயம் அதிகம் என்பதால் 50 வயதைக் கடந்தவர்களுக்கு அந்த வேலையும் இல்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். இந்த 100 நாள் வேலையும் சில மாவட்டங்களில் 3-4 மாதங்களில் 84 நாட்கள் கிடைத்திருக்கிறது. சில மாவட்டங்களில் வெறும் 6 நாட்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது. நிதி நிறுவனங்கள் ஊரடங்கு சமயத்தில் பணத்தை வசூலிக்கக் கூடாது என அரசு கூறியது. ஆனால், நடைமுறையில் அது நடக்கவில்லை. கடனை வசூலிக்கும்போது பெண்களை அநாகரிகமான வகையில் பேசி அவமானப்படுத்துவது இயல்பான வழக்கமாக மாறியிருக்கிறது. வங்கிக் கடன்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன் என 3 மாதங்கள் மட்டுமே வட்டி வசூலிக்கவில்லை. அதன்பிறகு சேர்த்து வசூலித்திருக்கின்றனர்.
ஊரடங்கால் விவசாயப் பெண்கள் சந்தித்த சிக்கல்களையும், அதனை களைய அரசாங்கம் செய்ய வேண்டியன என்ன என்பதையும் பட்டியலிடுகிறார் 'தமிழ்நாடு வுமன் கலெக்டிவ்' (Tamilnadu Women Collective) அமைப்பின் நிறுவனரும், விவசாயப் பெண்களிடையே தொடர் களப்பணியாற்றிவரும் ஷீலு ஃப்ரான்சிஸ்.
"நாங்கள் ஏப்ரலில் 62 தமிழக கிராமங்களிலும் செப்டம்பர் மாதத்தில் 66 கிராமங்களிலும் கணக்கெடுப்பு நடத்தினோம். இதில், ஏப்ரல் மாதத்தில் பெண்களிடையே 24% ஆக இருந்த பசிப் பிரச்சினை, 6 மாதங்கள் கழித்து செப்டம்பர் மாதத்தில் 42 சதவீதமாக அதிகரித்தது. இதன் விகிதம் இப்போது இன்னும் அதிகரித்திருக்கும். பெண்கள் வீட்டுக்கான உணவுத்தேவைகளை நிறைவேற்ற வீட்டிலிருந்த பாத்திரங்கள், ஆடு, மாடுகளை விற்றுள்ளனர்.
பெண்களுக்கு விவசாயி என்ற அங்கீகாரம் இல்லாததால் அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. சில பெண்கள் தனியாகவோ குழுவாகவோ நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு உழவர் அட்டையோ, கிசான் கிரெடிட் கார்டோ கிடைக்காது. எனவே, மத்திய அரசின் 6,000 ரூபாய் நிதியுதவி அவர்களுக்குக் கிடைக்காத சூழல் உள்ளது" என்கிறார் ஷீலு.
மேலும் அவர் கூறுகையில், ''பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் பெயரில் நிலம் இல்லாததால், அவர்களுக்கு 'விவசாயிகள்' என்ற அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை. அவர்களை 'பயிர் செய்பவர்கள்', 'விவசாயத் தொழிலாளர்கள்' என்றே அரசு சொல்கிறது. ஊரடங்கின் நெருக்குதலும், விளைவுகளும் தொடர் நிகழ்வுகளாக இறுக்கிப் பிசைந்துகொண்டிருக்கும் நிலையில், தரிசாக உள்ள நிலங்களை நீண்ட நாள் குத்தகைக்குப் பெண்களுக்குக் கொடுப்பது, விவசாயப் பெண்களுக்கு 'விவசாயி' என்கிற அந்தஸ்து வழங்கி அரவணைப்பது, பணப்பயிர்கள் இல்லாமல், அடிப்படைத் தேவையான உணவு உற்பத்தி செய்யும் பெண் விவசாயிகளுக்கு 'இன்சென்டிவ்' கொடுப்பது போன்றவை பெண் விவசாயக் கூலிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும், நீடித்த. நிலைத்த உணவு உற்பத்தியில் தமிழகமும் தன்னிறைவை அடையும்'' என்கிறார் ஷீலு.
விவசாயத்தில் ஈடுபடும் பெண்களை, வெறும் கூலிகளாகக் கருதாமல், தொழில்முறை உற்பத்தியாளர்களாகவும், பணியாளர்களாகவும் கருதி, விவசாயக் கூலிப் பெண்களை மையப்படுத்தி அரசின் சலுகைகளைத் திருப்ப வேண்டிய கட்டாயத்தை கரோனா அதிகரித்திருக்கிறது. அமைப்புசாரா முறைமையின் பெரும் பிரிவாக விவசாயக் கூலிப் பெண்களைக் கைதூக்கிவிடும் திட்டங்கள், கல்விச் செயல்பாடுகளின் வழியே உருவாக்கப்படும் பாலினச் சமத்துவத்தைவிட காத்திரமான சமூகப் பொருளாதார விளைவுகளை உருவாக்கவல்லது.
கரோனா தொற்றினால் ஏற்பட்ட பாலின ரீதியிலான தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை வழங்கிய 'மீனா சுவாமிநாதன் ஊடகக் கூட்டாய்வுக்காக' பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.
கட்டுரையாளர் தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment