Published : 12 Jan 2021 09:19 AM
Last Updated : 12 Jan 2021 09:19 AM
19.1.2021-ம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட முதல்வர் அனுமதி அளித்துள்ளார். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
''கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்றுப் பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும்தான் நோய்த்தொற்று படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது.
28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 2021 ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கோரப்பட்டது.
இக்கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீதப் பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதைக் கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனைக் கருத்தில் கொண்டும், வரும் 19.1.2021ம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.
பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது.
அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணாக்கர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT