Published : 28 Jun 2014 06:49 PM
Last Updated : 28 Jun 2014 06:49 PM

சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டிடம் தரைமட்டம்: பலி 11 ஆக அதிகரிப்பு; தொடர்கிறது மீட்புப் பணி

சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் தரைமட்டமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. பத்திரமாக மீட்கப்பட்ட 21 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி, ஞாயிற்றுக்கிழமையும் விடிய விடிய நீடித்துள்ளது. மேலும் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

முன்னதாக, சென்னை - போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆறுதல் கூறினார்.

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

விபத்து இடத்தில் முதல்வர் நேரில் பார்வை

முன்னதாக, விபத்து நடந்த இடத்தை முதல்வர் ஜெயலலிதா பார்வையிட்டார். அங்குள்ள அதிகாரிகளிடம் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். இடிபாடுகளில் 72 பேர் சிக்கியதாகவும், 31 பேர் மீட்கப்பட்டதாகவும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கட்டுமான நிறுவனம் விதிமுறைகள அனைத்தையும் மீறியதாகவும், விபத்துக்கான முழு காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கட்டிடத்துக்கு அனுமதி வழங்கியதில் தவறு இழைக்கப்படவில்லை என்றும், கட்டுமான நிறுவனம்தான் விதிமுறைகள் அனைத்தையும் மீறியாதாகவும் அவர் தெரிவித்தார்.

முதல்வர் வருகையையொட்டி, மீட்புப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு, இது அரசியல் உள்நோக்கம் கொண்ட கேள்வி என்றார்.

முந்தைய செய்தித் தொகுப்பு

சென்னை - மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் உயிரிழந்த 11 பேரில் 9 பேரின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

* சென்னை அருகே கட்டிடம் தரைமட்டமாகி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த ஆந்திர தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

* மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக, கட்டிட மேற்பார்வையாளர் வெங்கடசுப்ரமணியம் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* தரைமட்டமான கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களின் இதுவரை 32 பேர் மீட்கப்பட்டனர்; அதில், 11 பேர் உயிரிழந்தனர். பத்திரமாக மீட்கப்பட்ட 21 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் ஆந்திரம் / தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

* தெலங்கானா தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை அறிய 94910 12021, 94910 12012 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

* விஜயநகரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் 08922-236947 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம்.

மவுலிவாக்கம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். | >முழு விவரம்: முதல்வர் நிவாரண நிதியுதவி அறிவிப்பு

* கட்டிட இடிபாடுகளை அகற்ற இரண்டு நாட்கள் ஆகும் என தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தெரிவிக்கின்றனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டறிய நவீன கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, கட்டிட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட நால்வர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

* மவுலிவாக்கம் தரைமட்டமான கட்டிடத்தில், சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல் துறையினர் உள்ளிட்டோர் தொடர்ந்து முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

* மீட்புப் படையினரில் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், இன்று காலை ஒரு பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். உடனடியாக அவர் மருத்துமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

* கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை அடையாளம் கண்டு மீட்கும் பணியில் 5 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அவசர உதவி எண்:

* விபத்தில் சிக்கியுள்ளவர்கள் குறித்த தகவல் அறிய, தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் அவசர உதவி எண் 1070-ஐ தொடர்புகொள்ளலாம்.

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான விரிவான முதல் ரிப்போர்ட்:

சென்னை போரூர் அருகே முகலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் தரைமட்டமானதில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணி முழுவீச்சில் தொடர்ந்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 20 பேர் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை போரூர் அருகே 11 மாடி கட்டிடம் சனிக்கிழமை மாலை திடீரென இடிந்து தரைமட்டமானது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் போலீஸார் விடிய விடிய தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை அடுத்த போரூர், மவுலிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணிகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தரைமட்டமான கட்டிடம்...

மவுலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி என்ற தனியார் கட்டுமான நிறுவனம், 11 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டியிருந்தது. சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் திடீரென பலத்த இடியுடன் மழை பெய்தது. சூறைக்காற்றும் வீசியது. 5 மணியளவில் பிரைம் சிருஷ்டி நிறுவனத்தின் 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

கட்டிடம் இடிந்து விழுந்தபோது குண்டு வெடித்ததுபோல அப்பகுதியில் பயங்கர சத்தம் கேட்டது. கட்டிடம் இடிந்து விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

பலர் சிக்கித் தவிப்பு..

இடிந்து விழுந்த கட்டிடத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக தெரிகிறது. அவர்களில் பெரும் பாலோர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வாங்குவது வழக்கம். சனிக்கிழமை வேலை முடிந்ததும் தொழிலாளர்கள் எல்லோரும் சம்பளம் வாங்குவதற்காக கீழ் தளத்தில் காத்திருந்தனர். அப்போதுதான் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்...

சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்புப் படையினரும் போலீஸாரும் அப்பகுதிக்கு விரைந்து வந்து உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. மருத்துவக் குழுவினரும் விரைந்து வந்தனர். கட்டிடத்தில் இருந்த கம்பிகள் மீட்புப் பணிக்கு இடையூறாக இருந்ததால் அவை உடனடியாக காஸ் வெல்டிங் மூலம் வெட்டி அகற்றப்பட்டன.

இருட்டி விட்டதாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் மீட்புப் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது. மழையைப் பொருட்படுத்தாமல் தீயணைப்புப் படையினர் மீட்புப் பணியில் முழுவீச்சில் இறங்கினர். அவர்களுக்கு உதவியாக போலீஸார், பொதுமக்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் ஆகியோரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்புத் துறை இணை இயக்குநர் விஜயகுமார், அங்கு முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். மீட்புப் பணிக்கு வசதியாக அந்தப் பகுதியில் இருந்த கட்டிடங்களிலும் பெரிய கம்பங்களை நட்டும் ராட்சத விளக்குகளை பொருத்தினர். கட்டிட இடிபாடுகளை அகற்ற அகற்ற, அவற்றில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரவு 8.15 மணி அளவில் 10 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள சிலர், தங்களைக் காப்பாற்றும்படி குரல் கொடுத்தபடி இருந்தனர்.

இதற்கிடையே, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த 260 பேர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களும் மீட்புப் பணியில் தீவிரமாக இறங்கினர். விடிய விடிய மீட்புப் பணிகள் நடந்தன.

மீட்கப்பட்டோருக்கு சிகிச்சை...

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அதிகாரி கோ.நல்லமுத்து கூறுகையில், "அடுக்குமாடி கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 11 பேர் இங்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் மதுரையைச் சேர்ந்த மருதுபாண்டியன் என்பவர் இறந்துவிட்டார். பஞ்சாட்சரம் (52) என்பவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்" என்றார்.

இரவு 10 மணியளவில் இடிபாடுகளில் இருந்து 2 பெண்கள் மற்றும் ஒரு வாலிபரின் உடல்கள் மீட்கப்பட்டன.

பலி 9 ஆக அதிகரிப்பு

இன்று காலை நிலவரப்படி, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிகை 9 ஆக அதிகரித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களில் 20 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்றும், அதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

கட்டுமான நிறுவன உரிமையாளர், மகன் கைது

இடிந்து விழுந்த 11 மாடி கட்டிடம், கடந்த 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. சனிக்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், கட்டிடத்தின் முதல் 2 தளம் உள்வாங்கியது. அதைத் தொடர்ந்தே கட்டிடம் சாய்ந்து தரைமட்டமானதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

கட்டுமான நிறுவனம் விளக்கம் இடிந்து விழுந்த 'டிரஸ்ட் ஹைட்ஸ்' என்ற அடுக்குமாடி கட்டிடத்தை பிரைம் சிருஷ்டி என்ற கட்டுமான நிறுவனம் கட்டி வந்தது. நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன் அளித்துள்ள விளக்கத்தில், 'இடி விழுந்ததன் காரணமாக கட்டிடம் இரண்டாக பிளந்து விபத்து ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, முதல்வரின் உத்தரவையடுத்து, கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் மனோகரன் மற்றும் அவரது மகன் முத்து ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நிகழ்விடத்தில்...

* மவுலிவாக்கத்தில் இடிந்து தரைமட்டமான கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ள சில தொழிலாளர்கள், செல்போன் மூலம் தங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு காப்பாற்றும்படி கதறினர்.

* ''கட்டிட விபத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இடிபாடுகளில் 40-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது'' என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கூறினார்.

* ''மீட்டுப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

* 'கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை அடையாளம் கண்டு மீட்கும் பணியில் 5 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களில் சிலர், செல்போன் மூலம் தங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு, 'எப்படியாவது காப்பாற்றி விடுங்கள்' என்று கதறியபடி கெஞ்சியுள்ளனர்.

* பக்கத்தில் இருந்த மற்றொரு 11 மாடி கட்டிடமும் திடீரென அதிர்ந்து குலுங்கியதாக பீதி ஏற்பட்டது. அதில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

* விபத்து நடந்த இடத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இடிபாடுகளில் இருந்து மீட்கப்படுபவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வகையில் போலீஸார் போக்குவரத்தை சீரமைத்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x