Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

காஞ்சி நகரப் பகுதிக்குள் ஓடும் வேகவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு வீடுகள் ஒதுக்கும் பணி தொடக்கம்: ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் திட்டம்

வேகவதி ஆற்றின் கரையில் வசிப்பவர்களுக்கு மாற்றாக கீழ்கதிர்பூரில் வீடு ஒதுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித் துறை அதிகாரிகள்.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 1,850வீடுகளுக்கு மாற்றாக பொதுமக்களுக்கு வீடுகள் ஒதுக்கும் பணிதொடங்கியுள்ளது. இப்பணிகள் முடிந்ததும் ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

காஞ்சி நகரப் பகுதிக்குள் ஒடும் வேகவதி ஆறு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் வெள்ளநீர் நகருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016-ம் ஆண்டு இந்த ஆற்றில் பொதுப் பணித் துறை கணக்கெடுப்பு நடத்தி, 1850 வீடுகள் வேகவதி ஆற்றை ஆக்கிமித்து கட்டப்பட்டுள்ளதை கண்டறிந்தது.

இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித் துறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியது. ஆனால், சில அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போராட்டத்தின்போது அவர்களுக்கு மாற்று இடம்வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கீழ்கதிர்பூர் பகுதியில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள 2,112 வீடுகளை, வேகவதி ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மாற்றாக வழங்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் வேகவதி ஆற்றை ஆக்கிரமித்து வீடு கட்டிகுடியிருப்போரின் அடையாளங்கள் பயோ மெட்ரிக் முறையில் கடந்த சில தினங்களாக பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு வீடு ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வீடுகள் ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் வீடு மாறுவதற்கு கால அவகாசம் கொடுத்து, அதற்குபின்னர் வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப் பணித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுஉள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x