Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனியைச் சேர்ந்த ஜீவா- லட்சுமி தம்பதியருக்கு ஆரூரன் என்ற 2 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் இதயத்தில் வீக்கம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தஞ்சையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, “குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இந்த அறுவை சிகிச்சையை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில்தான் செய்ய முடியும். குழந்தையின் உடல்நிலை மோசமாக இருப்பதால், ஆம்புலன்ஸ் மூலம் விரைந்து செல்ல வேண்டும்” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தமிழ்நாடு ஆல் டிரைவர்ஸ் அசோஷியேஷன் மூலம் தஞ்சாவூரிலிருந்து கோவைக்கு குழந்தையை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று காலை 5.35 மணிக்கு தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாரத்தசாரதி குழந்தையுடன் ஆம்புலன்ஸில் புறப்பட்டார். ஆம்புலன்ஸில் செவிலியர் ஒருவருடன், குழந்தையின் தாய் லட்சுமி மற்றும் உறவினர்கள் இருந்தனர். 265 கிலோ மீட்டர் தொலைவை 2.45 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் காலை 8.20 மணிக்கு கோவை தனியார் மருத்துவமனையை சென்றடைந்தது. அங்கு குழந்தை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குழந்தையை 2.45 மணிநேரத்தில் கோவை மருத்துவமனைக்கு கொண்டுசேர்த்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பார்த்தசாரதியை கோவை தமிழ்நாடு ஆல்டிரைவர் அசோஷியேஷன் பாராட்டியது.
இதுகுறித்து பாரத்தசாரதி கூறியதாவது: நான் 8 ஆண்டுகளாக ஆம்புலன்ஸ் ஓட்டிவருகிறேன். தஞ்சாவூரிலிருந்து கோவைக்குச் செல்ல வழக்கமாக 5.30 மணிநேரம் ஆகும். 2 மாதங்களுக்கு முன்பு அதே மருத்துவமனைக்கு ஒரு குழந்தையை 5 மணிநேரத்தில் அழைத்துச் சென்றிருக்கிறேன். தற்போது, 2.45 மணி நேரத்தில் சென்றுள்ளேன். தமிழகம் முழுவதுமிருந்து ஓட்டுநர்கள் என்னை தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஒத்துழைப்பு நல்கிய காவல் துறையினர் மற்றும் சக ஓட்டுநர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT