Published : 11 Jan 2021 08:40 PM
Last Updated : 11 Jan 2021 08:40 PM
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டு ஜன.16-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி மஞ்சுவிரட்டு திடல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தயாராகி வருகிறது.
சிராவயலில் ஆண்டுதோறும் தை மாதம் 3-ம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. புகழ் பெற்ற இந்த மஞ்சுவிரட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கும்.
இந்தாண்டு ஜன.16-ம் தேதி நடக்கும் இந்த மஞ்சுவிரட்டுக்காக சுற்றுவட்டாரக் கிராமங்களில் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி, பாய்ச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காளைகளை பிடிக்க முடியாதபடி கொம்புகளும் இளைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல சிராவயல் கிராமத்திலும் மஞ்சுவிரட்டு திடல் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.
மஞ்சுவிரட்டுத் திடலை சுத்தம் செய்து தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடங்கள் போன்றவற்றை தயார் செய்து வருகின்றனர்.
மஞ்சுவிரட்டு ஜன.16-ம் தேதி காலை 11 மணிக்கு பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். தொடர்ந்து முன்னோர் வழிபாட்டை முடித்து, வாண வேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் செல்வர். தொழுவில் உள்ள மாடுகளுக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்வர். தொடர்ந்து கோயில் காளைகள் அவிழ்த்துவிட்டதும், மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்படும்.
இந்த மஞ்சுவிரட்டில் சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்க உள்ளன.
இதை காண்பதற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டினரும் பங்கேற்பர். சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி அக்கிராமத்தைச் சுற்றியுள்ள திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், கிளாமடம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகளும் விழாக் கோலம் பூண்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT