Published : 11 Jan 2021 06:55 PM
Last Updated : 11 Jan 2021 06:55 PM

சென்னையைப் போல் மதுரையில் காற்று மாசுபாடு அதிகரிப்பு: ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை ஆய்வு செய்த மதுரை எம்.பி அதிருப்தி  

மதுரை 

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றியுள்ள பூங்கா மேம்பாட்டுப் பணிகள், விளக்குத்தூண், பத்துத்தூண், மாசி வீதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் நடக்கின்றன.

இப்பணிகள் விரைவாக நடக்காததால் மக்கள் மிகுந்த சிரமப்படுவதாகவும் பஸ்நிலையம் கட்டுமானப்பணியும் தாமதமாகுவதால் பயணிகள், மழையிலும், வெயிலிலும் சாலையில் பேருந்துக்காக காத்திருக்கும் அவலம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பணிகளை இன்று மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல், கடுமையான தூசி, காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. மதுரையில் காற்று மாசு சென்னையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.

சென்னையின் இன்று காற்று மாசு குறியீட்டு எண் 117 என்ற அளவிலும், மதுரையின் காற்று மாசு குறியீட்டு எண் 109 என்ற அளவிலம் உள்ளது. ஏறக்குறைய 8 தான் வித்தியாசம் அந்த அளவிற்கு காற்று மாசுபாடு மதுரையில் ஏற்பட்டு உள்ளது.

ஒரு மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும்போது இது போன்று ஏற்படுவதை தவிர்க்க முடியாது. வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றாலும் மக்களுக்கு குறைவான சிரமத்தை ஏற்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நடைபெற்று வரும் 14 பணிகளில் ஒரு பணி மட்டும் கடந்த செப்டம்பரில் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும், சரியான திட்டமிடுதல்படி நடைபெறுகிறதா என்பதையும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சரியான பணிகள் முறையாக தரமாக கொடுப்பதை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் என்னால் ஆன முயற்சிகள் செய்து வருகிறேன்.

மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளான வைகை வடகரையில் உள்ள 15 வார்டு பகுதிகளுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.275 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

வைகை தென்கரையில் உள்ள மீதமுள்ள வார்டுகளுக்கு உரிய நிதியுதவி பெற்றவுடன் பணிகள் விரைவில் தொடங்கப்படும். வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்தப் பணிகள் முடிக்கப்பட்டு நகரப்பேருந்துகள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் அரசு, செயற்பொறியாளர் முருகேசபாண்டியன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) சுரேஷ்குமார், ஆரோக்கிய சேவியர், மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x