Last Updated : 11 Jan, 2021 05:52 PM

2  

Published : 11 Jan 2021 05:52 PM
Last Updated : 11 Jan 2021 05:52 PM

50 சதவீத இருக்கையால் வருவாய் இழப்பு: சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த பரிசீலிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தமிழக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்ததுவது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் வைத்துள்ள கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழக திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி மதுரை வழக்கறிஞர் எஸ்.முத்துக்குமார், போனிபாஸ், ராம்குமார் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீசரன் ரெங்கராஜன் வாதிடுகையில், திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் மறு உத்தரவு வரும் வரை திரையரங்குகள் 50 சதவீத இருக்கையுடன் செயல்படும். காட்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் வாதிடுகையில், திரையங்குகளில் தூய்மைப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அதிக செலவாகும்.

இதனால் சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும். நொய்டா, டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர் மதுரம் வாதிடுகையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாகும் திரைப்படங்களுக்காக 3 நாட்களுக்கு பெரும்பாலான திரையரங்குகளில் நூறு சதவீத டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், நீதிமன்றத்தின் அறிவுறுத்தலையடுத்து நூறு சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அரசாணையை திரும்ப பெற்று, இருக்கையை 50 சதவீதமாக குறைத்ததற்காக அரசை நீதிமன்றம் பாராட்டுகிறது.

சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை அரசு பரிசீலிக்க வேண்டும்.

திரையரங்குகளில் ஏற்கனவே நூறு சதவீத இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மீதமுள்ள 50 சதவீத டிக்கெட்டுகளை அடுத்தக் காட்சிக்கு அனுமதிக்க வேண்டும்.

திரையரங்குகளில் அதிக கூட்டம் கூடுவதை தடுப்பது, அனைவரும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திரையரங்கு உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டும். அரசும் இதனை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x