Published : 11 Jan 2021 03:02 PM
Last Updated : 11 Jan 2021 03:02 PM
முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆதரவு அளித்தால், தமிழகத்தில் புதிய சரித்திரம் படைக்கலாம் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், கோவை மண்டலத்தில் 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காகக் கோவை வந்துள்ளார். 2-வது நாளான இன்று துடியலூர், அன்னூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது கமல்ஹாசன் கூறும்போது, ''இன்னும் 3 மாதங்களுக்குப் பிறகு நம்முடைய வாழ்க்கையை இப்படியே தொடரப் போகிறோமா அல்லது தமிழகத்தையே சீரமைக்கப் போகிறோமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
முதல்முறையாக வாக்களிக்கப் போகிறவர்கள், அரை நூற்றாண்டு காலத் தமிழகத்தில் ஒரு சரித்திரத்தைப் படைத்துக் காட்டப் போகிறீர்கள்.
நீங்கள் அதைச் செய்வதுடன் நிற்காமல், ராஜ விசுவாசம் என்று நினைத்துக்கொண்டு செய்த தவறையே மீண்டும் செய்து கொண்டிருக்கும் மக்களின் மனதை மாற்றி, மாற்றத்திற்காக வாக்களிக்கச் செய்ய வேண்டும். அவர்களிடம் சொல்லுங்கள்- 'சாதி பார்த்து வாக்களிக்காதீர்கள், சாதிப்பவர்களைப் பார்த்து வாக்களியுங்கள்' என்று. அப்படிச் செய்தால் நிச்சயம் நாளை நமதாகும்'' என்று தெரிவித்தார்.
முன்னதாக மனுநீதி அறக்கட்டளைத் தலைவரும், தொழில் அதிபருமான அத்தப்ப கவுண்டர், கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள தனியார் ஹோட்டலில் நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்து, மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அப்போது மக்கள் நீதி மய்யத் துணைத் தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT