Published : 11 Jan 2021 01:50 PM
Last Updated : 11 Jan 2021 01:50 PM

பணி முடிந்தவர்களுக்கு பதவி நீட்டிப்பா?- துணைவேந்தர்கள் நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டும்: பொன்முடி வலியுறுத்தல்

சென்னை

பதவிக்காலம் முடிவடைந்து, பிரிவு உபச்சார விழாவும் நடத்தப்பட்ட பிறகு பெரியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் இரண்டின் துணைவேந்தர்கள் பதவியை ஆளுநர் நீட்டிப்பது சரியான செயலல்ல; பணி நீட்டிப்பு உத்தரவினை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என்று க.பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி இன்று வெளியிட்ட அறிக்கை:

''சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் பதவிக் காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இருவரின் பதவிக்காலமும் நிறைவுற்று- பிரிவு உபச்சார விழாவும் நடத்தப்பட்டு- பொறுப்புகளை ஒப்படைத்த பிறகு பணி நீட்டிப்பு வழங்கியிருப்பது ஆரோக்கியமான செயலன்று என்பது மட்டுமல்ல- அவசியமற்றதுமாகும். வெளிப்படையான தேர்வு முறைக்கு “விடை” கொடுக்கும் மிக மோசமான செயலாகும்.

புதிய துணைவேந்தர்களைத் தேர்வு செய்ய “தேர்வுக் குழு” அமைக்கப்பட்ட பிறகு- துணைவேந்தர்களுக்கு ஏன் பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்? அதிமுக அரசின் சார்பில் அந்தக் கோரிக்கை வைக்கப்பட்டதா? தமிழக ஆளுநர் தன்னிச்சையாக இந்த முடிவினை எடுத்தாரா? என்பதெல்லாம் கேள்விக் கணைகளாக அணிவகுத்து நிற்கின்றன.

துணைவேந்தர்கள் பணி ஓய்வு பெறுவதை முன்னிட்டு- உயர் கல்வித்துறைச் செயலாளர் தலைமையில் துணைவேந்தர் பொறுப்புக் குழுவும் அமைக்கப்பட்ட பிறகு, ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியாகியுள்ள இந்த அவசர அறிவிப்பு- திடீர் பணி நீட்டிப்பு கல்வியாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும்- பேராசிரியர்கள்- ஆசிரியர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்ப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உயர்கல்வித் துறையை எந்த அளவிற்குச் சீரழிக்க முடியுமோ அந்த அளவிற்கு அதிமுக அரசு சீரழிப்பதும்- அதை ஆளுநர் அமைதியாக வேடிக்கை பார்ப்பதும் அவர் வகிக்கும் வேந்தர் பொறுப்பிற்கு ஏற்றதல்ல.

“பணி நீட்டிப்பு” வழங்கிய துணைவேந்தர்களை வைத்துக்கொண்டு- உயர்கல்வியின் தரத்தை எப்படி உயர்த்த முடியும் எனத் தமிழக ஆளுநர் கருதுகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அதிமுக அரசும் இதற்கு எப்படி ஒப்புதல் கொடுத்தது என்பதும் திரை விலகாத மர்மமாக இருக்கிறது. “பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறேன். ஊழலுக்கு இடமில்லை” என்று அடிக்கடி கூறி வந்த ஆளுநரின் இந்தப் பணி நீட்டிப்பு உத்தரவு மிகுந்த வேதனையளிக்கிறது.

இது உயர் கல்வியின் தரத்தைத் தாழ்த்தி- தமிழக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தினை வீழ்ச்சிப் பாதையில் தள்ளும் என்று தெரிந்தே வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் பணி நீட்டிப்பு உத்தரவினை வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட வேறு எந்தப் பல்கலைக்கழகத்திற்கும் துணைவேந்தர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்கும் முயற்சியில் வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநர் ஈடுபட வேண்டாம் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு பொன்முடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x