Published : 11 Jan 2021 11:36 AM
Last Updated : 11 Jan 2021 11:36 AM

என்னை மேலும் மேலும் வேதனைக்குள்ளாக்க வேண்டாம்: ரஜினிகாந்த் வேண்டுகோள்

சென்னை

நான் அரசியலுக்கு வரவில்லை என்கிற என் முடிவைத் தெளிவாகச் சொல்லிவிட்டேன், போராட்டம் நடத்தி என்னை அரசியலுக்கு வரச் சொல்லி மேலும் மேலும் என்னை வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வருவேன், கட்சி தொடங்குவேன் என ரஜினிகாந்த் அறிவித்திருந்த நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அரசியல் முடிவைக் கைவிட்டார். அவர் அரசியலுக்கு வரவேண்டும் எனக் கோரி ரசிகர் மன்றத்தினரின் ஒரு பகுதியினர் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரசிகர் மன்றத் தலைமை வேண்டாம் என்று கூறியும், போராட்டத்தில் ஈடுபட்டது குறித்தும் ரஜினி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையில் ரஜினி கூறியதாவது:

''என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு...

நான் அரசியலுக்கு வராதது பற்றி, மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்றப் பதவியில், பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவை மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தில் இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கெனவே விரிவாகக் கூறியுள்ளேன். நான் என் முடிவைக் கூறிவிட்டேன்.

தயவுசெய்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ் நாடு, ஜெய்ஹிந்த்''.

இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x