Published : 19 Jun 2014 04:00 PM
Last Updated : 19 Jun 2014 04:00 PM

முல்லை பெரியாறு: பிரதமர் மோடிக்கு விஜயகாந்த் பாராட்டு

உச்சநீதிமன்ற ஆணைப்படி, முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழு அமைக்க ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை முடிவை பாராட்டி வரவேற்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "முல்லை பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வுகாணும் விதத்தில் உச்சநீதிமன்ற ஆணைப்படி மேற்பார்வை குழு அமைக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவை தமிழக மக்கள் சார்பாக பாராட்டி வரவேற்கிறேன்.

கடந்த மாதம், தேமுதிக சார்பில் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சனைகளை காலதாமதமின்றி தீர்த்து வைத்து, விவசாயம் மேம்பட வழிவகை காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தேன்.

உச்சநீதிமன்றம் கடந்த மாதம் அளித்த தீர்ப்பின்படி, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 136அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தப்படுவதை என்பதை உறுதி செய்யவும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பணிகளை மேற்கொள்ளும்போது அணையின் பாதுகாப்பு குறித்தும் மேற்பார்வையிட மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்கவும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் நேற்று (18-ம் தேதி) பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய நீர்வள உயர் அதிகாரி தலைமையில் மூவர் கொண்ட மேற்பார்வை குழு அமைக்க காலம் கடத்தாமல் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறேன்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையினால் மதுரை, தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் விவசாயம் செழிப்பதற்கு வழிகாணப்பட்டுள்ளது.

இதே போன்று மாநிலங்களுக்கு இடையேயான காவிரி மற்றும் பாலாறு பிரச்சினையிலும் தமிழக மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை மத்திய அரசு செய்து தரும் என்று தமிழக மக்கள் மனதார நம்புகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எந்தவித பாரபட்சமும் இன்றி இந்தியாவின் எல்லா மக்களுக்குமான அரசாக துரிதமாக செயல்படுவதை தேமுதிக சார்பில் மனதார வாழ்த்தி வரவேற்கிறேன்". இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x