Published : 11 Jan 2021 03:26 AM
Last Updated : 11 Jan 2021 03:26 AM
தை பிறந்தால் வழிபிறக்கும் என மு.க.ஸ்டாலின் கூறியது திமுகவுக்கு அல்ல, பாஜகவுக்குதான் என பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயில் முன்பு பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி அவரது தனிப்பட்ட கருத்தை பேசியுள்ளார். இது அவர்களின் கட்சி விவகாரம். இதுகுறித்து எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் பதில் அளிப்பார்.
பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. யாரும் யாரையும் வழிநடத்தவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. நாங்கள் முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்தால், அக்கட்சி முதலில் திமுகவிடம் எத்தனை சீட் கேட்கிறது என பார்ப்போம்.
தை பிறந்தால் வழிபிறக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பது, திமுகவுக்கு அல்ல பாஜகவுக்குதான். புதிய வேளாண் சட்டங்கள் அனைவருக்கும் சாதகமானதுதான். கடந்த 2016-ம் ஆண்டு திமுக வெளியிட்ட சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில், இப்போது வேளாண் சட்டத்தில் உள்ள அம்சங்கள் உள்ளன. இதுகுறித்து ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். அல்லது, அதில் கூறியவை தவறு என மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவர் சதீஷ், மாவட்டச் செயலாளர் கென்னடி, தொகுதி ஒருங்கிணைப்பாளர் பூண்டி வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, திருச்சி மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் கோப்பு கிராமத்தில் நேற்று நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவில் பங்கேற்ற குஷ்பு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியை குறைசொல்ல முடியாது. அதேசமயம், கருணாநிதியுடன் ஸ்டாலினை ஒப்பிட முடியாது. 4 ஆண்டு அதிமுக ஆட்சிக்கு மக்களிடம் கெட்ட பெயர் இல்லை. சமூக வலைதள பிரச்சாரத்தால் தேர்தலில் எந்த மாற்றமும் நடைபெறாது.
வேட்பாளர்கள், கட்சியைப் பார்த்தே மக்கள் வாக்களிப்பார்கள். பெண்களை இழிவாக பேசிவிட்டு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்காதது வருத்தமளிக்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT