Published : 11 Jan 2021 03:26 AM
Last Updated : 11 Jan 2021 03:26 AM
பொங்கல் பண்டிகையை முன் னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மஞ்சள் அறுவடை செய்யப்பட்டு சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், தொடர் மழையால் மகசூல் பெருமளவுக்கு பாதிக்கப் பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகையின்போது கரும்பு, மஞ்சள் அதிகளவில் மக்களால் வாங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகளவில் நெல், வாழை பயிரிடப்படுகிறது. கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
இதனால் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிக்கைக்கு தேனி, மதுரை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து லாரிகளில் கரும்புகள் கட்டுக்கட்டாக கொண்டுவந்து விற்பனை செய்யப்படும். பெரும்பாலும் பொங்கலுக்கு ஒருமாதத்துக்கு முன்பே கடைவீதிகளில் கரும்புக் கட்டுகள் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இதுபோல் மாவட்டத்தில் திருநெல்வேலி, சேரன்மகாதேவி வட்டாரங்களில் ஒருசில இடங்களில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி டவுன் பாறையடி, சாலியர்தெரு பகுதிகளில் கால் ஏக்கர் அல்லது இதைவிடக் குறைந்த அளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறத.
பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மஞ்சள் அறுவடை பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஆனால், மஞ்சள் செடிகளில் கிழங்குகள் பருமனாக இல்லாமல் சிறுத்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து இப்பகுதி விவசாயி கே. மணிகண்டன் கூறும்போது, ‘‘தொடர் மழையால் மஞ்சள் குலைகள் தரமில்லாமல் இருக்கின்றன. ஒருசில வயல்களில் தண்ணீர் பெருமளவு தேங்கி மஞ்சள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பெருமளவுக்கு மகசூல் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.
செலவிட்ட தொகை கிடைக் குமா என்பது சந்தேகமாக உள்ளது. வேலையாட்கள் கூலி, விதை மஞ்சள், உரம் என ஏராளம் செலவிட்டு சாகுபடி செய்திருந்தோம். ஆனால், மஞ்சள் விளைச்சல் சரியாக இல்லை. தரமான மஞ்சள் குலை ரூ.20 முதல் ரூ.50 வரையில் விற்கப்படும்.
ஆனால் இவ்வாண்டு அந்த அளவுக்கு விலைபோகாத நிலையில் மஞ்சள்குலையில் கிழங்குகள் சிறுத்திருக்கின்றன.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மழையால் பாதிப்பு இல்லை என்பதால் நல்ல மகசூல் கிடைத்திருந்தது என்றார்.
பொங்கல் பண்டிகை தேவைக்கு ஏற்றாற்போல் நெல்லை மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி இல்லை என்பதால் வழக்கம்போல் இவ்வாண்டும் ஈரோடு உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து மஞ்சள் குலைகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT