Published : 10 Jan 2021 08:23 PM
Last Updated : 10 Jan 2021 08:23 PM
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான திமுக மகளிரணியின் போராட்டத்தைத் தடுக்கும் அளவுக்கு தமிழகத்தில் சர்வதிகார ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு முடிவு கட்டும் நாள் நெருங்குகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை வடக்கு மாவட்டம், ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி, ஆண்டியப்ப கிராமணி தெருவில் இன்று (10-01-2021) நடைபெற்ற மக்கள் வார்டு சபைக் கூட்டத்தில் பங்கேற்றார்.
மக்கள் வார்டு சபைக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசியதாவது:
''நாம் எதைச் செய்தாலும் அதற்குத் தடை போடுவதுதான் அதிமுக அரசின் வழக்கம். அதேபோலத்தான், கிராம சபைக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று தடை போட்டார்கள். எதற்கு இதைத் தடை செய்ய வேண்டும்? இதனால் பொதுமக்களுக்கு இடையூறு இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகிறதா?
நாம் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து, இப்படிக் கூட்டம் கூட்டுவதற்குத் தடை போட்டார்கள். அந்தத் தடையை மீறி நாம் நடத்துவோம் என்று நடத்திக் கொண்டிருக்கிறோம். என்ன தடை போட்டாலும், அதை மீறி நடத்தக் கூடிய சக்தி திமுகவுக்கு உண்டு என்பதை நிரூபித்து, நாம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.
கொலை வழக்கு நம் மீது போடப்பட்டதில்லை. ஊழல் வழக்கு நம் மீது நிரூபிக்கப்பட்டதில்லை. அரசியல் ரீதியாக என்ன வழக்கு வேண்டுமானாலும் போடுங்கள். அதைப் பார்த்துக் கொள்ளக்கூடிய ஆற்றலை பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் தந்திருக்கிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் உங்களுக்குத் தெரியும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நாடு முழுவதும் அதைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
பொள்ளாச்சியில் 250 இளம்பெண்களைக் கடத்திச் சென்று, ஒரு பங்களாவில் அடைத்து வைத்து, அவர்களைக் கட்டாயப்படுத்தி, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அத்தோடு விடாமல், அதனை வீடியோ எடுத்து - நீ மீண்டும் வரவில்லை என்றால் இதை இணையதளங்களில் வெளியிட்டு விடுவோம், சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி, அச்சுறுத்தி இருக்கிறார்கள்.
அவை சில இணையதளங்களில் வந்ததை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். "அண்ணா என்னை விட்டு விடுங்கள்" என்று கெஞ்சுவதை எல்லாம் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்த விஷயம் வெளியே வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாலேயே வெளியே வந்துவிட்டது. திமுகதான் இதை முதலில் கையில் எடுத்தது. நீதி விசாரணை தேவை என்று நாம் கூறினோம்.
அதற்குக் காரணம், இதில் ஆளுங்கட்சிக்குத் தொடர்பு இருக்கிறது. இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், துணை சபாநாயகராக இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் இதில் சம்பந்தப் பட்டிருக்கிறார் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியிட்டார்கள். அவருடைய தலைமையில்தான் இந்தக் கொடுமை நடந்திருக்கிறது. விசாரணை செய்யவேண்டும் என்று நாம் போராட்டம் நடத்தி, நீதிமன்றத்தில் வழக்குப் போட்டோம்.
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார்கள். சி.பி.ஐ. விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதற்கிடையே ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்களை எல்லாம் எப்படியாவது தப்பிக்க வைப்பதற்காக எவ்வளவோ முயற்சிகள் எடுத்து, இவர்கள் யாரையும் கைது செய்யாமல் இந்த அதிமுக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனால் இப்பொழுது 4 நாட்களுக்கு முன்னால் சி.பி.ஐ. 3 பேரைக் கைது செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர் யார் என்றால், அதிமுகவைச் சேர்ந்த மாணவரணிச் செயலாளராகப் பொறுப்பில் இருப்பவர். கட்சிப் பொறுப்பில் மட்டுமல்ல, அவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் வேண்டியவர். தோள் மேல் கை போட்டுக் கொண்டு எடுத்த புகைப்படம் எல்லாம் வெளியே வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் விசாரணை வேகப்படுத்தப்பட்டிருப்பது ஓரளவுக்கு நமக்குத் திருப்திதான். நியாயம் கிடைக்கப் போகிறது, நீதி கிடைக்கப் போகிறது. ஆனால், இதற்கிடையே இதை விரைவுபடுத்த வேண்டும், வேகப்படுத்த வேண்டும், வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் என்று சொல்லி, இன்றைக்கு நம்முடைய மகளிர் அணியின் சார்பில், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, முறையாக காவல்துறையிடம் அனுமதி வாங்கி, நடத்தப்படும் என்று அறிவித்தோம்.
அதன்படி அந்தப் போராட்டத்தை நடத்துவதற்காக, கனிமொழி காரில் புறப்பட்டுச் சென்றார். அவர் தங்கி இருந்த இடத்தில் இருந்து, அந்தக் கூட்டத்திற்குப் போகும்போது காவல்துறையினர் தடுத்து விட்டார்கள். அதுமட்டுமின்றி, அதில் கலந்து கொள்வதற்காகப் பல இடங்களிலிருந்து நிறைய மகளிர் வந்திருந்தனர். அவர்களை எல்லாம் வரக்கூடாது என்று காவல்துறையினர் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.
அவ்வாறு போராட்டம் நடந்தால், அதிமுக. அரசின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் அல்லவா? அதற்காகத் திட்டமிட்டு இதைத் தடுக்க முயன்றார்கள். அப்பொழுது கனிமொழி தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார். இதேபோல, எங்களைத் தடுத்து நிறுத்துகிறார்கள் என்ன செய்வது என்று கேட்டார். தடுத்து நிறுத்தினால் அந்தத் தடையை மீறிச் செல்லுங்கள், கவலைப்படாதீர்கள் என்று நான் கூறினேன்.
அந்தத் தடையை மீறிச் சென்று விட்டார். அப்பொழுதும் விடவில்லை. அதற்குப் பிறகு நான் காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோரை அழைத்து, டிஜ.பியிடம் பேசச் சொன்னேன்.
“அனுமதி வழங்கவில்லை என்றால், நாளை தமிழ்நாடு முழுவதும் இருக்கும் மகளிரைத் திரட்டி எல்லா இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அறிவித்தேன். அதுவும் நானே அந்தப் போராட்டத்திற்குச் செல்வேன்” என்று கூறினேன்.
இந்த விஷயத்தை நான் தொலைபேசியில் பேசினேன். ஏனென்றால் அப்போதுதான் இந்த விஷயம் ‘டேப்’ ஆகி, இந்தச் செய்தி உடனடியாக ஆளுங்கட்சிக்குச் செல்லும் என்பது தெரியும். அவ்வாறே சென்றது. உடனே அதற்கு அனுமதித்து, போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், இவ்வளவு அநியாயமான, சர்வாதிகார ஆட்சி இன்று தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே, இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கான நாள் வந்துவிட்டது. தை பிறக்கப் போகிறது, தை பிறந்தால் வழி பிறக்கும் என்று எல்லோரும் சொல்வது உண்டு. அதேபோல் இந்த ஆண்டு, தை பிறக்கப் போகிறது; வழியும் பிறக்கப் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT