Published : 10 Jan 2021 03:26 PM
Last Updated : 10 Jan 2021 03:26 PM
ஜிப்மரில் சிறப்புக் கலந்தாய்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் அதிருப்தியடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஜிப்மர் நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு உத்தரவுப்படி மருத்துவப் படிப்புக்கு முதற்கட்டம், 2-ம் கட்டம் மற்றும் மாப்-அப் கலந்தாய்வு நடத்தி இடங்களை நிரப்ப வேண்டும். இறுதிக்கட்டக் கலந்தாய்வுக்குப் பிறகு சிறப்புக் கலந்தாய்வு நடத்தி நிரப்பிக் கொள்ளலாம் என மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்தது.
அதன்படி, புதுச்சேரி ஜிப்மர் மற்றும் காரைக்கால் ஜிப்மர் கிளையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத எம்பிபிஎஸ் இடங்களுக்கு கடந்த 29-ம் தேதி சிறப்புக் கலந்தாய்வு நடக்க இருந்தது. இதனைத் தேதி குறிப்பிடாமல் ஜிப்மர் நிர்வாகம் ஒத்திவைத்தது. இந்நிலையில், இன்று (ஜன.10) காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஜிப்மர் அப்துல் கலாம் கலையரங்கில் சிறப்புக் கலந்தாய்வு நடைபெறும் என்றும், இதில் மாணவர்கள் நேரடியாகப் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், திடீரென நேற்று முன்தினம் இரவு தரவரிசை அடிப்படையில் 190 மாணவர்களின் பட்டியலையும் வெளியிட்டுக் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறிவித்தது.
இந்நிலையில் இன்று காலை ஜிப்மரில் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது நேரடிக் கலந்தாய்வு என்பதால் புதுச்சேரி, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் எனப் பல மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது பெற்றோருடன் கலந்தாய்வு நடைபெறும் கலையரங்கின் முன்பு குவிந்தனர்.
ஆனால், ஜிப்மர் வெளியிட்ட பட்டியலில் இடம் பெறாத மாணவர்களும் அங்கு குவிந்ததால் சிறப்புக் கலந்தாய்வை ரத்து செய்வதாக திடீரென ஜிப்மர் நிர்வாகம் அறிவித்தது. இதனால் அதிருப்தியடைந்த மாணவர்கள் ஜிப்மர் நிர்வாகத்திடம் இது தொடர்பாக முறையிட்டனர். அப்போது, ‘‘கலந்தாய்வில் பங்கேற்க 190 பேரின் பட்டியல் வெளியிட்டுள்ளோம். ஏன் இணையதளத்தைப் பார்க்காமல் வந்தீர்கள்’’என்று கேள்வி எழுப்பியது.
ஆனால், மாணவர்களோ, ‘‘ஜிப்மர் வெளியிட்ட பட்டியலில் உள்ள மாணவர்களில் பலர் ஏற்கெனவே ஜிப்மரிலேயே எம்பிபிஎஸ் சேர்ந்துள்ளனர். மற்றவர்கள் எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். எனவே, சிறப்புக் கலந்தாய்வு நடத்த வேண்டும்’’எனக் கோரிக்கை வைத்தனர். அதனை ஜிப்மர் நிர்வாகம் ஏற்கவில்லை.
இதனால் புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்கள் தங்களது பெற்றோருடன் ஜிப்மர் நிர்வாகத்தைக் கண்டித்து ஜிப்மர் மருத்துவமனையின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜிப்மர் நுழைவு வாயில் மூடப்பட்டது.
இதுகுறித்துத் தகவலறிந்த கோரிமேடு இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்கள், ‘‘சிறப்புக் கலந்தாய்வு நடைபெறும் என ஜிப்மர் நிர்வாகம் கூறியதால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்ததுடன், நீண்ட தூரம் பயணம் செய்து புதுச்சேரிக்கு வந்துள்ளோம். ஆனால், ஜிப்மரோ பொறுப்பற்ற முறையில் கலந்தாய்வை ரத்து செய்து எங்களை அலைக்கழித்துள்ளது. இதுகுறித்துக் கேட்டால் மீண்டும் கலந்தாய்வு நடத்துவது தொடர்பாக ஜிப்மர் இணையதளத்தில் அறிவிப்பு வரும். அதனைப் பார்த்துவிட்டு வாருங்கள் என்று கூறுகின்றனர். இதனை ஏற்க முடியாது’’எனத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘‘12-ம் தேதி வரை ஜிப்மர் இணையத்தில் பதிவு செய்யுங்கள். 13-ம் தேதி கலந்தாய்வில் பங்கேற்போர் குறித்த பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் 15-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும். அதுவரை போராட்டத்தில் ஈடுபடாமல் கலைந்து செல்லுங்கள்’’என்று கூறினர். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT