Published : 10 Jan 2021 02:40 PM
Last Updated : 10 Jan 2021 02:40 PM
வைகையைப் போன்று, முதலில் கடைமடைக்குத் தண்ணீர் திறந்தால் மட்டுமே, பெரியாறு பாசன நீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என சிவகங்கை மாவட்ட விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48-வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி-1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 129 கண்மாய்களுக்குட்பட்ட 6,038 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதேபோல் மாணிக்கம் கால்வாய், சிங்கம் புணரி கால்வாய், மறவமங்கலம் உள்ளிட்ட விஸ்தரிப்பு மற்றும் நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.
ஆண்டுதோறும் வைகை அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு பெரியாறு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டத்துக்கு முறையாக திறப்பதில்லை. ஒவ்வொரு முறையும் விவசாயிகள் போராட்டம் நடத்திய பிறகே சிவகங்கைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. அதுவும் உரிய பங்கு நீரை திறப்பதில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறது.
விவசாயிகளோ, ‘மேலூர் பகுதியில் தண்ணீர் திறக்கும்போதே சிவகங்கை மாவட்டத்துக்கும் திறக்க வேண்டும். கட்டாணிப்பட்டி 1 மற்றும் 2 ஆகிய கால்வாய்களில் வினாடிக்கு 30 கன அடி, 48-வது மடைக் கால்வாயில் 35 முதல் 40 கன அடி, லெசிஸ், ஷீல்டு கால்வாய்களில் 50 கன அடி என்ற விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் திறக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்துக்கு பெரியாறு பாசன தனிக்கோட்டம் உருவாக்க வேண்டும்,’ என்பன உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் மாவட்ட நிர்வாகமோ போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதிலேயே குறியாக இருக்கிறது. இதனால் பல ஆண்டுகளாக இப்பிரச்சினை தொடர்கிறது. மேலப்பூங்குடி விவசாயி ஆதிநாராயணன் கூறியதாவது: ‘எங்களை போன்ற பெரிய விவசாயிகளிடம் நெற்களஞ்சியங்கள் உள்ளன. தற்போது அவை காலியாக கிடக்கின்றன. எங்களது பகுதி மழை மறைவு பகுதி. அதனால் பெரியாறு நீர் எங்களுக்கு முக்கிய ஆதாரம். நீரை முறையாக திறக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் பல ஏக்கரை தரிசாக விட்டுள்ளோம்.
வைகை ஆற்றில் நீர் திறக்கும்போது முதலில் கடைமடையான ராமநாதபுரம் மாவட்டத்துக்குத் திறக்கப்படுகிறது. ஆனால் பெரியாறு பாசனநீரை மதுரை மாவட்டத்துக்கு திறந்ததுபோக மிச்சம் இருந்தால் மட்டுமே கடைமடையான சிவகங்கை மாவட்டத்துக்கு திறக்கின்றனர். அதுவும் தண்ணீரை தொடர்ந்து திறக்காமல், அடிக்கடி அடைத்து திறப்பதால், கண்மாய்களுக்கு முழுமையாகச் சென்றடைவதில்லை. கால்வாய் சேதம், மண் கால்வாய் போன்றவற்றால் தண்ணீர் இழப்பும் ஏற்படுகிறது. சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசனக் கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கும் அதிகாரம் மேலூர் கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் உள்ளது.
இதனால் சிவகங்கை மாவட்டத்துக்கு தனி கோட்டம் ஏற்படுத்த வேண்டும். அப்போது தான் அக்கறையாக நீர் திறப்பர். சிவகங்கை மாவட்டத்தில் நேரடி, விஸ்தரிப்பு, நீட்டிப்பு கால்வாய்கள் மூலம் 14 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. இதனால் தனி கோட்டம் உருவாக்கலாம், என்று கூறினார்.கள்ளராதினிப்பட்டி மாணிக்கம் கூறியதாவது: அணையின் நீர் இருப்பை பொறுத்தே திறக்கும் தண்ணீரின் அளவு முடிவு செய் யப்படுகிறது. அதன்படி அனைத்து பகுதிகளுக்கும் சரியான பங்கீட்டு அடிப்படையில் திறக்கிறோம் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் அவர்கள் கூறியபடி நீர் திறப்பதில்லை. சிவகங்கை மாவட்டத்துக்குரிய பங்கு நீரை மதுரை மாவட்ட மீன், வாத்து பண்ணைகள், விஸ்தரிப்பு கால்வாய் பகுதிகளுக்கு விற்று விடுகின்றனர். இதுகுறித்து கேட்டால் விவசாயிகளே திறந்து கொள்வதாகக் கூறுகின்றனர். கால்வாய் ஷட்டர் சாவிகள் பொதுப்பணித்துறை ஊழியர்களிடம் தான் இருக்க வேண்டும். ஆனால் மேலூரில் பல இடங்களில் ஷட்டர் சாவிகளை விவசாயிகளே வைத்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு சென்றுவிட்டன. அந்த நிலத்துக்குரிய தண்ணீர் எங்கே என்பதை அதிகாரிகள் கூற மறுக்கின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியபடி சரியாக தண்ணீர் திறக்கப்படுகிறதா? என்பதை சிவகங்கை மாவட்ட அதிகாரிகளும் கண்காணிப்பதில்லை என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT