Published : 02 Oct 2015 03:04 PM
Last Updated : 02 Oct 2015 03:04 PM

பொன்விழா கொண்டாடும் தருமபுரி மக்களின் வரவேற்பும், எதிர்பார்ப்பும்

தருமபுரி மாவட்டம் 02-10-1965-ம் ஆண்டு உதயமானது. இன்றுடன் தருமபுரி மாவட்டம் உதயமாகி 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த தருணத்தை சிறப்பாகக் கொண்டாட பல்வேறு அமைப்புகள் ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்நேரத்தில், கடந்த 50 ஆண்டு களில் இந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகள், எதிர்பார்ப் பில் உள்ள திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பார்க்கலாம்.

மாவட்டத்தின் பெருமைகள்

பொன்விழா காணும் தருமபுரி மாவட்டத்தின் பெருமை தரும் அம்ச மாக சுற்றுலா தலமான ஒகேனக்கல், ஆன்மிக தலமான தீர்த்தமலை ஆகிய வற்றை குறிப்பிடலாம். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி, ரயில் நிலையம், கேந்திரிய வித்யாலயா பள்ளி, சமீபத்தில் கொண்டுவரப்பட்ட அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை கூடுதல் சிறப்புகள்.

விவசாய வளம், அணைகள்

மாவட்ட மக்களுக்கு வாழ்வா தாரம் அளிப்பதுவிவசாயம் மற்றும் அதைச் சார்ந்த தொழில்கள் தான். மாவட்டம் முழுக்க சுமார் 1.5 லட்சம் ஹெக்டேர் நிலப் பரப்பு விவசாய பூமியாக உள்ளது. கரும்பு, நெல், தென்னை, சிறு தானியங்கள், பருப்பு வகைகள், மாம்பழம், புளி, மரவள்ளி, நிலக் கடலை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் என பல ரக பயிர்களுக்கும் உகந்த மண் வளம் உள்ளது. ஆனால், இவ்வளவு நிலத்தையும் வளப்படுத்த நீராதாரம் தான் சவாலாக உள்ளது. மழை பொய்த்துவிடும் காலங்களில் கிராமப்புற மக்கள் சிரமத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் வாணி யாறு, தொப்பையாறு, சின்னாறு, கேசர்குளி, நாகாவதி, தும்பலஅள்ளி, ஈச்சம்பாடி, வரட்டாறு என 7 அணைகள் உள்ளன. இருந்தும் கூட ஓரிரு அணைகளைத் தவிர மற்றவை தொடர்ந்து பல ஆண்டுகளாக வறண்டே கிடக்கின்றன. இதனால் விவசாயத்தை முழு உத்திர வாதத்துடன் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இது விவசாயிகளை யும், ஏழைத் தொழிலாளர்களையும் அவ்வப்போது வெளி மாநிலங்கள், மாவட்டங்களுக்கு பிழைப்பு தேட விரட்டி விடுகிறது.

தொழில் வாய்ப்புகள்

சுமார் 15 லட்சம் மக்கள் வசிக்கும் தருமபுரியில் விவசாயத்தை தவிர நிரந்தர தொழிலுக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் இல்லை. தருமபுரியில் இருந்து (2004-ல்) பிரிந்து சென்ற கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருப்பது போன்று தொழில் வாய்ப்பு தரும் மண்டலத்தை உருவாக்கினால் மட்டுமே வேலை தேடி இடம்பெயரும் அவலத்துக்கு முடிவுகட்ட முடியும். தருமபுரியில் சிப்காட் மையம் அமைப்பது ஏட்டளவிலேயே இருந்து வருகிறது.

தலைநகர கட்டமைப்பு

மாவட்டம் பிரிந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது போலவே, தருமபுரி நகராட்சிக்கும் 50 ஆண்டுகள் ஆகிறது. பொன்விழா காணும் நகராட்சி தன் மக்களுக்கு சாலைகள், வடிகால் கட்டமைப்பு, பசுமை நகரம் என எதிலுமே திருப்தி தரும் வசதியை அளிக்கவில்லை. தருமபுரி நகரம் மேடும், பள்ளமும் கலந்த நிலவியல் அமைப்பு கொண்டது. இந்த நிலவியல் அமைப்பு நீர் வடிகாலுக்கு சிறந்தது. இருந்தும் கூட பல இடங்களில் கழிவு நீர் தேங்கியபடி நோய் பரப்பும் பணியை செய்து வருகிறது. சாலை கட்டமைப்பு விஷயத்தில் அலட்சியம் நிலவுகிறது. போதாக்குறைக்கு, பாதாள சாக்கடை திட்டத்தால் நகர சாலைகள் முழுக்க ஆங்காங்கே மேடு பள்ளமாக உள்ளது.

கல்வி வளர்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் 60 முதல் 70 சதவீதம் என்ற கல்வியறிவு வீதம் தான் நிலவுகிறது. மாவட்டத் தில் சமீபத்திய அரசு கலை, பொறியியல் கல்லூரிகளின் வரத்து எதிர்காலத்தில் கல்வியறிவு வீதத்தை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத் தின் சிசுக்கொலை, கருக்கொலை, சாதிய மோதல்கள் ஆகிய அவலங்களுக்கு கல்வியறிவு பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணம். மலை கிராமங்கள் அதிகம் உள்ள நிலையில் அந்த பகுதி யிலும் கல்வியறிவு வீதம் அதிகரிக்க, அரூரை தலைமையிடமாகக் கொண்டு கூடுதல் கல்வி மாவட்டம் உருவாக்கவேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்து.

பெண் சிசுக்கொலை

தமிழகத்தில் பெண் சிசுக்கொலை யின் முதல் 5 முன்னோடி மாவட்டங்கள் என்ற வரிசையில் தொடர்ந்து தருமபுரி இருந்து வருகிறது. இங்கு அரசு தொட்டில் குழந்தை மையம் அமைக்கப்பட்ட பிறகு ஓரளவு இது குறைந்திருப் பினும் முற்றிலும் தடுக்கப்பட வில்லை. இதற்கிடையில் சிசுக் கொலையின் வடிவம் மருத்துவ வளர்ச்சியின் துணையுடன் கருக் கொலையாக ஆங்காங்கே அரங் கேறுவது வேதனையின் மறு வடிவம். தீவிர கண்காணிப்பு, விழிப் புணர்வு பணி, தனிநபர் வருமானத்தை அதிகரிக்கத் தேவையான திட்டங்கள் ஆகியவையே இதை தடுக்கும் வழிகள்.

ஒகேனக்கல் குடிநீர் திட்டம்

தருமபுரி மாவட்ட மக்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய, நீண்ட கால அடிப்படை பிரச்சினையாக இருந்து வந்தது புளூரோசிஸ் பாதிப்பு. மனித உடலின் பலத்தையும், இயக்கத்தையும் முடக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே என அரசுக்கு தெரியும். இருப்பினும், 2007-ம் ஆண்டில் தான் ஜப்பான் நாட்டிடம் நிதியுதவி பெற்று ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் 2012-ம் ஆண்டு இந்த குடிநீர் திட்டம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இருந் தபோதும் இந்த திட்டம் இதுவரை மாவட்டத்தின் 60 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே சென்று சேர்ந்திருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x