Published : 10 Jan 2021 01:49 PM
Last Updated : 10 Jan 2021 01:49 PM

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளுக்காக அலைச்சல்: பெரியகுளத்தில் மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படுமா?

பெரியகுளத்தில் அனைத்து மகளிர் காவல்நிலையம் அமைக்கக்கோரி பெரியகுளம் வளர்ச்சி பேரவை சார்பில் காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வியிடம் மனுக் கொடுக்கப்பட்டது.

பெரியகுளம்

பெரியகுளத்தில் மகளிர் காவல் நிலையம் இல்லாததால் பெண்கள் மீதான வன்முறை, பாலியல் புகார்களுக்கு தேனிக்குதான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பெரியகுளம் மற்றும் அதனைச் சார்ந்துள்ள கிராம மக்கள் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் ஆண்டிபட்டி ஆகிய ஊர்களில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் பெரியகுளத்தைத் தவிர மற்ற இடங்களில் அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. ஆனால் மலைக் கிராம மக்கள், விவசாயக் கூலிகள், பாமர மக்கள் அதிகம் உள்ள பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் அடிக்கடி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மலைக் கிராமங்களில் போக்குவரத்து வசதியும் குறைவு என்பதால் புகார் தருவதற்கும், வழக்கு விசாரணைக்கும் பெரும் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே பெரியகுளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கை காரணமாக பெரியகுளம் ஆடுபாலம் அருகே நகராட்சி வணிக வளாகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் போலீஸார் இடம் தேர்வு செய்துள்ளனர்.

ஆனால் பல மாதங்களாகியும் செயல்படத் தொடங்கவில்லை. இது குறித்து பெரியகுளம் வளர்ச்சி பேரவை சார்பில் காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண்தேஜஸ்வியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இப்பேரவையின் செயலாளர் மு.ஆறுமுகம், துணைத் தலைவர் நேசம் முருகன், கவுரவ ஆலோசகர் ஆர்.விஜயகுமார் ஆகியோர் கூறுகையில், நூறாண்டு கடந்த நகராட்சி என்ற பெருமை உடைய பெரியகுளத்தில் மகளிர் காவல் நிலையம் இல்லாதது மிகப் பெரிய குறைபாடாக உள்ளது. குடும்ப வன்முறை, வரதட்சணை, பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கு அலைய வேண்டியதுள்ளது. எனவே விரைவில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x