Published : 10 Jan 2021 01:27 PM
Last Updated : 10 Jan 2021 01:27 PM

வேட்பாளருடன் களம் இறங்கிய நாம் தமிழர் கட்சி: வாரச்சந்தைகளில் வலம் வந்து வாக்காளர்களை சந்திப்பு 

நத்தம் அருகே செந்துறை வாரச்சந்தையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர் சிவசங்கரன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர்.

திண்டுக்கல் 

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் வேட் பாளராக அறிவிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நத்தம் தொகுதி வேட்பாளர் சிவசங்கரன், கிராமப்புறங்களில் கூடும் வாரச்சந்தைகளில் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய ஏழு தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதிலும் நான்கு தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், மூன்று தொகுதிகளில் பெண் வேட்பாளர் களையும் களம் இறக்க நாம் தமிழர் கட்சி
யின் தலைமை திட்டமிட்டு வருகிறது. 2021 சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை அதிமுக, திமுக என பிரதான கட்சிகள் மேற்கொண்டுவரும் நிலையில், அவர்களின் வேட்பாளர்கள் யார் என்பது தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும்.

ஆனால் நாம் தமிழர் கட்சியினரோ திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் வேட்பாளராக நத்தம் தொகுதியில் வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் நத்தம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சிவசங்கரன் மீண்டும் இந்த தொகுதியில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளரான சிவசங்கரன், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அனுமதியுடன் தேர்தல் பிரச்சா ரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் வழங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து கடந்த தேர்தல் போல் சின்னம் குழப்பம் இல்லாமல் சின்னத்தை அச்சிட்டே வேட்பாளர் அறிமுக சுவரொட்டிகள் மூலம் தனது தேர்தல் பணியை தொடங்கினார் சிவசங்கரன்.

இதைத்தொடர்ந்து இளைஞர்களுடன் சேர்ந்து கிராமப்பகுதிகளில் நாம்தமிழர் கட்சி கொடிகளை ஏந்தி பிரச்சாரத்தில் இறங்கி விட்டார்.
நத்தம் தொகுதி கிராமங்கள் நிறைந்த பகுதி, ஒவ்வொரு பகுதியிலும் குக்கிராமங்களை ஒட்டியுள்ள பெரிய கிராமங்களில் வாரத்தில் ஒரு நாள் சந்தைகள் நடைபெறும். பொருட்களை வாங்க வாரச்சந்தையில் பல கிராம மக்கள் கூடுவர். இதை பயன்படுத்தி மக்களை எளிதில் சந்திக்க ஏதுவாக வாரச் சந்தைகளை தேர்வு செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.

இளைஞர்களுடன் சென்று சந்தையில் உள்ள சிறுவியாபாரிகள், சந்தைக்கு வரும் கிராமப்புற மக்கள் ஆகியோரை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி சின்னத்தை கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் கோபால்பட்டி வாரச்சந்தையில் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இந்த வாரம் செந்துறை கிராமத்தில் நடைபெற்ற வாரச்சந்தையில் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பிரதான கட்சிகளே தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் வேட்பாளர்களை அறிவித்து முறைப்படி பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டு, தற்போது ஆயத்தப் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சியினர் நத்தம் தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து தற்போதே களம் இறங்கியுள்ளனர். இதன் மூலம் தேர்தலுக்கு முன்னர் தொகுதியிலுள்ள அனைத்து மக்களையும் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. மக்களை எங்கள் பக்கம் ஈர்ப்போம் என்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x