Published : 10 Jan 2021 01:21 PM
Last Updated : 10 Jan 2021 01:21 PM
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நடந்த எருது விடும் விழாவின்போது வீட்டுக் கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
வேப்பனப்பள்ளி அருகே உள்ள நேரலகிரி கிராமத்தில் ஆண்டுதோறும் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது எருது விடும் விழா நடத்துவது வழக்கம். நடப்பு ஆண்டின் மாரியம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி நேற்று எருது விடும் விழா நடந்தது. இந்த விழாவைக் கண்டு ரசிக்க அப்பகுதி கிராம மக்கள் வீடுகளின் மொட்டை மாடி, சுவர்கள், ஓட்டு வீடுகளின் மேற்கூரை ஆகிய இடங்களில் ஏறி அமர்ந்து கொள்வதும் வழக்கம்.
அவ்வாறு நேற்று எருது விடும் விழாவை ஆங்காங்கே திரண்டும், உயரமான இடங்களில் அமர்ந்தும் கிராம மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், ஓடு மூலம் கூரை வேயப்பட்ட வீடு ஒன்றின் மீது சுமார் 50 பேர் வரை அமர்ந்து விழாவை ரசித்துக் கொண்டிருந்தனர். பழமையான அந்த வீடு அதிக பாரத்தைத் தாங்க முடியாத நிலையில் திடீரென மேற்கூரை சரிந்தது.
இந்தச் சம்பவத்தில் கூரை மீது அமர்ந்திருந்தவர்கள், வீட்டின் கீழே திரண்டு நின்று வேடிக்கை பார்த்தவர்கள் என சுமார் 30 பேர் வரை காயமடைந்தனர். அவர்களில் 8 வயதுச் சிறுவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். எனவே, அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக வேப்பனப்பள்ளி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT