Published : 10 Jan 2021 01:27 PM
Last Updated : 10 Jan 2021 01:27 PM

பழநி தைப்பூச விழாவுக்கு பாதயாத்திரையை தொடங்கிய பக்தர்கள்: பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்

தைப்பூசவிழாவை முன்னிட்டு பழநி கோயிலுக்கு அலகு குத்தி கிரிவீதிகளில் வலம் வந்த பக்தர்.

பழநி 

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர அனைத்து துறைகளை சேர்ந்தவர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பிரசித்தி பெற்ற விழாக்களில் தைப்பூச விழா, பங்குனி உத்திரம் விழா ஆகியவை முக்கியமானவை. இதில் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது பங்குனி உத்திர விழா நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

வெளியூர் பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் பக்தர்கள் கூட பங்குனி உத்திர விழாவில் பங்கேற்காமல் எளிமையாக கோயிலுக்குள்ளேயே நடந்து முடிந்தது. பழநி கோயில் வரலாற்றில் பங்குனி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது இதுவே முதல்முறை. தற்போது கரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பல கட்டுப்பாடுகளுடன் தைப்பூசத் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பழநியில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ள நிலையில், வழக்கம்போல பக்தர்கள் தற்போதே விரதம் இருந்து பாதயாத்திரையை தொடங்கி விட்டனர்.

பக்தர்களுக்கு கட்டுப்பாடு

தற்போது குறைந்த அளவிலான பக்தர்களே வந்து செல்லும் நிலையில் கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தைப்பூச விழாக்காலத்தில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கரோனா கட்டுப்பாடுகளான சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை முழுமையாக கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் நிலையில் இந்த ஆண்டு தினசரி 25 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்ல வசதியாக சாலையோரம் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.

பக்தர்கள் இரவில் பாதயாத்திரை செல்ல வசதியாக சாலையோரங்களில் மின்விளக்குகள் அமைப்பது, குப்பைகளை உடனுக்குடன் சேகரித்து அகற்றுவது, குடிநீர் வசதி என உள்ளாட்சி நிர்வாகங்களும், சாலைகளில் உள்ள பழுதுகளை சீரமைப்பது நெடுஞ்சாலைத்துறையின் பணியாகவும், இடும்பன்குளம், சண்முகநதிகளில் நீராடும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருக்க தீயணைப்புத்துறையினரும் பணியில் ஈடுபடுவர். காவல்துறையினரும் 24 மணி நேரமும் சுழற்சிமுறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பில் பக்தர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பணிகள் தற்போது தொடங்கிவிட்டன.

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு என திண்டுக்கல்-பழநி சாலையில் தனியாக பாதை உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பக்தர்கள் செல்லுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட இந்த பாதையை 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை கொண்டு சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அந்தந்த பகுதி கிராம ஊராட்சிகள் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இவ்விழாக்காலத்தில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைத்தும், நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைத்தும் செயல்படுவது வழக்கம். இந்த ஆண்டு கூடுதலாக மருத்துவ முகாம்களை அமைக்க சுகாதாரத்துறை முன்வர வேண்டும். முதியோர், குழந்தைகள் தைப்பூச விழாவில் பங்கற்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 28-ம் தேதி மாலையில் நடைபெறுகிறது. அன்று பழநியில் சுவாமி தரிசனத்திற்கு ஏராளமானோர் குவிவர் என்பதால் உரிய கட்டுப்பாடுகளுடன், மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x