Published : 10 Jan 2021 12:48 PM
Last Updated : 10 Jan 2021 12:48 PM
"இந்தியாவில் உள்ள எவரும் உட்புக முடியாத கோட்டைகளுள் சிறந்தது இந்தக் கோட்டை" மராட்டிய மன்னர் சிவாஜி செஞ்சிக் கோட்டையைப் பற்றி சிலாகித்துச் சொன்ன வார்த்தை இது…
மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ நீளமுள்ள மதில் சுவர்களால் இணைக்கப்பட்டது செஞ்சிக் கோட்டை. ‘கிழக்கின் ட்ரோய்’ என்று கிழக்கிந்திய கம்பெனி இக்கோட்டையை அழைத்து. முகலாயர்களால் ‘பாதுஷாபாத்’, சோழர்களால் ‘சிங்கபுர நாடு’ என்று அழைக்கப்பட்டது. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.
800 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக்கோட்டை, 80 அடி அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இந்த அகழிக்கிடையேதான் இன்றைய செஞ்சி- திருவண் ணாமலை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ராஜா கோட்டை, ராணி கோட்டை என இரு பிரிவுகளாக இக்கோட்டை உள்ளது. ராணிக் கோட்டையில் கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், கமலக்கன்னியம்மன் கோயில் ஆகியவை சற்றே சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கோட்டை அரணுக்குள் ஆனைக்குளம் உள்ளது. இக்கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க்கம், ராஜகிரி ஆகிய குன்றுகள் உள்ளன.
செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்டத் தொடங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். இங்குள்ள கோயில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டிடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.
இப்பகுதியில் சமணர்கள் வாழ்ந்தனர் என்றும் கல் வெட்டுக்கள் சொல்கின்றன. பல்லவர் காலத்தில் தற்போது சிங்கவரம் எனப்படும் சிங்கபுரத்தில் குகைகோயில் கட்டப்பட்டது, செஞ்சிக்கு தெற்கே பனமலைபேட்டையில் தாளகிரிஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது. கிபி 580-630 ஆண்டில் சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவ மன்னர்களின் ஆளுகையில் இருந்ததாக சொல்கிறது.
சோழர்கள் கிபி 871 முதல் 907ம் ஆண்டுகளில் ஆட்சி செய்திருகின்றனர். ராஜராஜன் சோழன் 1 (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. கிபி 1014-1190 ஆண்டுகளில் பாண்டியர்கள் ஆளுகையில் இருந்தததாக கல்வெட்டுகள் சொல்கின்றன. 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசுகளின் ஆளுகையிலும் இருந்தது. விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக் கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.
பின்னர் மராட்டியர்களிடம் இருந்த இக்கோட்டையை பிஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக்கோட்டையை கி.பி 1,677 ஆண்டில் மீட்ட மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார். ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப் பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து, அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டார். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற் றுகை இட்டிருந்த போதும் 7 வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. அந்த காலகட்டத்தில்தான் 10 மாதம் ராஜா தேசிங்கு என அழைக்கப்படும் தேஜஸ் சிங் ஆட்சி புரிந்தார். இறுதியில் 1698 ம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது.
பின்னர், இக்கோட்டை கர்நாடக நவாப்புக்களின் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரர்களிடம் தோற்றனர். இறுதியாக 1761 கிழக்கிந்திய கம்பெனி இதனைக் கைப்பற்றிக் கொண்டது. இக்கோட்டையை சிறிது காலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தார். இக்கோட்டை இறுதியாகப் கிழக்கிந்திய கம்பெனி வசம் சென்ற பின்னர் முக்கியமான படை நடவடிக்கைகள் எதுவும் இங்கே நிகழவில்லை. 1921-ம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு, தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அன்றிலிருந்து இன்று வரையிலும் செஞ்சிக்கு வரலாற்றில் மட்டுமல்ல; அரசியலிலும் தனி இடமுண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
கோட்டைக்குச் செல்ல விருப்பமா...
விழுப்புரத்தில் இருந்தும், திருவண்ணாமலையில் இருந்தும் 37 கி.மீ தொலைவில் இருக்கிறது செஞ்சிக் கோட்டை. திண்டிவனத்தில் இருந்து 27 கி.மீ தொலைவில் இருக்கிறது. செஞ்சி கூட்டுச் சாலையில் இருந்து, அதாவது செஞ்சி நகரத்துக்கும் கோட்டைக்கும் இடைப்பட்ட தூரம் 1.5 கி.மீ.
விழா காலங்களில் மட்டும் இங்கிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்றபடி ஆட்டோ வசதி உண்டு. கோட்டைக்குள் செல்வோர் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லவும். குரங்குகள் தொல்லை இருப்பதால் பார்வையில் படும்படி எடுத்துச் செல்ல வேண்டாம். மறைவான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது உகந்தது. மாலை 6 மணிக்கு மேல் கோட்டைக்குள் இருக்க யாருக்கும் அனுமதி இல்லை. இந்தியர்களுக்கு ரூ.10, வெளிநாட்டவர்களுக்கு
ரூ.100 கட்டணம் பெறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT