Published : 10 Jan 2021 12:13 PM
Last Updated : 10 Jan 2021 12:13 PM
கடலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 96 ஆயிரம் ஹெக்டேரிலும், குறுவை பருவத்தில் 53 ஆயிரம் ஹெக்டேரிலும், நவரையில் 20 ஆயிரம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், டெல்டா பாசனத்தை மட்டுமே நம்பி சம்பா பருவத்தில் 50 ஆயிரம் ஹெக்டேரிலும், குறுவை பருவத்தில் 25 ஆயிரம் ஹெக்டேரிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
பிற டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருப்பது போன்று கடலூர் மாவட்டத்தில் நிரந்தர கொள்முதல் கட்டிடங்கள் இல்லை. நெல் உற்பத்திக்கு தகுந்தவாறு, ஒவ்வொரு ஆண்டும் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப் படுகிறது. இதுதொடர்பாக விவசாயிகளிடம் அதிருப்தி இருந்து வரும் நிலையில், நடப்பாண்டு சம்பா பருவம் தொடங்கியிருக்கிறது.
89 நிலையங்கள் திறப்பு
இந்நிலையில், ‘கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி நெல் கொள்முதல் செய்ய 89 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்’ என கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “நடப்பு சம்பா பருவத்தில் கடலூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 91 ஆயிரம் ஹெக்டரில் நெல் சாகுபடி செய்து, தற்போது அறுவடை தொடங்கியிருக்கிறது. விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 10 இடங்களில் முதல் கட்டமாகவும், 79 இடங்களில் 2-ம் கட்டமாகவும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.
புவனகிரி வட்டத்தில் 10 கிராமங்களில், ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 23 கிராமங்களில், பண்ருட்டி வட்டத்தில் ஒரு கிராமத்தில், வேப்பூர் வட்டத்தில் 5 கிராமங்களில், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் 18 கிராமங்களில், திட்டக்குடி மற்றும் விருத்தாசலம் வட்டங்களில் தலா 16 கிராமங்களில் என மொத்தம் 89 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நடப்பு கொள்முதல் பருவத்திற்கு மத்திய அரசு சன்ன ரகத்திற்கு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,888-உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக ரூ. 70-ஐயும் சேர்த்து மொத்தம் ரூ.1,958 விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதேபோன்று மத்திய அரசு சாதாரண ரகத்திற்கு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,868 உடன் தமிழக அரசு போனஸ் தொகையாக ரூ.50-யும் சேர்த்து மொத்தம் ரூ.1918 விவசாயிகளுக்கு வழங்கப்படும். எனவே, விவசாயிகள் அருகில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்று பயனடையலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு சம்பா சாகுபடி 1 லட்சத்து 60 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்திருந்த நிலையில், நடப்பாண்டில் 2 லட்சம் மெட்ரிக் டன் வரை நெல் உற்பத்தி இருக்கும் என கணித்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர், நேரடி கொள்முதல் நிலையங்களை 150 வரை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அரசு எத்தனை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்தாலும், டெல்டா பாசனப் பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பகுதிகளில் நிரந்தரக் கட்டிடங்களைக் கொண்ட நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் விருப்பம். அதை மாவட்ட நிர்வாகம் வரும் காலங்களில் நிறைவேற்றும் என நம்புவோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT