Published : 10 Jan 2021 10:32 AM
Last Updated : 10 Jan 2021 10:32 AM
இணையவழி வகுப்புகளில் கலந்துகொள்ள ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Cards) வழங்கிட அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை:
''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் மற்றும் ஜெயலலிதா அரசு எடுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளின் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களின் சேர்க்கை விகிதம் தமிழ்நாட்டில் 32 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், கல்லூரி மாணாக்கர்கள் சிறந்த கணினித் திறன்களைப் பெற்றிட ஜெயலலிதா அரசு, அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணைய வழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதிக் கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு (2 GB Data) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் (Data Cards) வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன்.
இக்கோவிட் பெருந்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட ஜெயலலிதாவின் அரசால் வழங்கப்படும் விலையில்லா தரவு அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று மாணாக்கர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT