Published : 09 Jan 2021 08:46 PM
Last Updated : 09 Jan 2021 08:46 PM
தமிழகத்தில் இதுவரை 325 வகைப் பட்டாம்பூச்சிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 74 சதவீதப் பட்டாம்பூச்சி வகைகள் கோவை சிறுவாணி பகுதியில் மட்டுமே இருப்பது இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பினர் (டிஎன்பிஎஸ்) நடத்திய 5 ஆண்டுகள் தொடர் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ் தலைவர் அ.பாவேந்தன் கூறியதாவது:
விடுமுறை நாட்களில் குறைந்தபட்சம் மாதம் ஒரு முறை, 3 முதல் 4 பேர் குழுவாகச் சென்று கணக்கெடுப்பில் ஈடுபட்டோம். சாடிவயல் சோதனைச் சாவடி முதல் கோவை குற்றாலம், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், தமிழக- கேரள எல்லை வரை கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்போது முழுவதும் வளர்ச்சியடைந்த பட்டாம்பூச்சிகளை மட்டும் கருத்தில்கொள்ளாமல், பட்டாம்பூச்சிகளின் முட்டைகள், புழு, கூட்டுப்புழு நிலையையும் பதிவு செய்துள்ளோம்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் 5 கி.மீ சுற்றளவில் குறைந்தபட்சம் 75 வகையான பட்டாம்பூச்சிகள் தென்படும் இடங்களை வளமான பகுதிகளாக (ஹாட்ஸ்பாட்) குறிப்பிடலாம். சிறுவாணியில் மட்டுமே 240 வகை பட்டாம்பூச்சிகள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, அந்தப் பகுதியை அதிக வளம் மிக்க (சூப்பர் ஹாட்ஸ்பாட்) பகுதியாகக் குறிப்பிடலாம். 'மெனி டெய்ல்டு ஓக்ஃபுளூ' வகை பட்டாம்பூச்சிகள் ஆண்டின் பெரும்பான நாட்களில் சிறுவாணி பகுதியில் நல்ல எண்ணிக்கையில் தென்பட்டன. 'மலபார் பேண்டட் பீகாக்’, 'மலபார் ரோஸ்' வகை பட்டாம்பூச்சிகள் சிறுவாணியின் உயரமான பகுதிகளில் தென்பட்டன.
அரிதாகத் தென்படும் 'நீலகிரி கிராஸ் யெல்லோ’, 'பிளைன் ஃப்பின்’, 'லெஸ்ஸர் கல்’, 'சாக்லேட் ஆல்பட்ராஸ்' 'நீலகிரி டைகர்’, 'மலபார் டீரி நிம்ஃப்’, 'டானி ராஜா' உள்ளிட்ட பட்டாம்பூச்சிகளும் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இடம்பெயர்வுக் காலத்தில இங்கு அதிக அளவிலான 'டைகர்’, 'குரோ' வகைப் பட்டாம்பூச்சிகளைக் காண முடிந்தது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில், வனத்துறையுடன் இணைந்து தொடர் கணக்கெடுப்பு நடத்தினால் இன்னும் சில வகை பட்டாம்பூச்சிகள் இங்கு தென்படலாம். இந்தத் தொடர் கணக்கெடுப்பில் டிஎன்பிஎஸ் உறுப்பினர்கள் தெய்வபிரகாசம், ஸ்ராவன்குமார், நிஷாந்த், ரமணசரண், கோபாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், விஸ்வநாதன், தர்ஷன் திரிவேதி, கீதாஞ்சலி உள்ளிட்டோரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அ.பாவேந்தன் தெரிவித்தார்.
தாவரங்களின் வளத்துக்கு எடுத்துக்காட்டு
கடந்த 2015 மார்ச் முதல் 2020 டிசம்பர் வரை சிறுவாணி பகுதியில் நடைபெற்ற கணக்கெடுப்பின் தொகுப்பு, மாவட்ட வன அலுவலர் து.வெங்கடேஷிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெங்கேடேஷ் கூறும்போது, “பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பது சிறுவாணி பகுதியில் உள்ள தாவரங்களின் வளத்தை எடுத்துக்காட்டுகிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT