Last Updated : 27 Oct, 2015 03:07 PM

 

Published : 27 Oct 2015 03:07 PM
Last Updated : 27 Oct 2015 03:07 PM

கோவையில் திருமண உதவித்தொகை பெற 2 வருடங்களாக காத்திருக்கும் 253 பேர்: அதிகாரியின் கையொப்பத்தால் குழப்பம்

கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரியின் கையொப்பம் குறித்த சர்ச்சையில் 253 பேருக்கு, கடந்த 2 வருடங்களாக திருமண உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழை, எளிய பெண்களின் திருமணத்துக்காக சமூக நலத்துறை மூலம் அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது திருமண உதவித்தொகை. பள்ளிப் படிப்பு முடித்த ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும், 4 கிராம் தங்கமும், பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகையுடன் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது.

இத் திட்டம் மறுசீரமைக்கப் பட்டவுடன் ரூ.266.40 கோடி ஒதுக்கீடு செய்து, முறையாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பயனளிக்கும் என உறுதியளிக்கப்பட்டது. பொதுவாக இத் திட்டத்தில் விண்ணப்பிப் போருக்கு முன்னுரிமைப் பட்டியல் அடிப்படையில் ஓரிரு மாதங்களில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டில் விண்ணப்பித்த 253 பேருக்கு இதுவரை திருமண உதவித்தொகை வந்து சேரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிகாரிகள் நிலையில் ஏற்பட்ட தவறுகளால், பொதுமக்களுக்குச் சேர வேண்டிய உதவித்தொகைகள் இரண்டு வருடங்களாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. அரசின் உதவித்தொகையை நம்பி திருமணச் செலவுகளை செய்த பல குடும்பங்கள், என்றாவது ஒருநாள் உதவித்தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளன.

போலி கையெழுத்தா?

கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறும்போது, ‘கோவை மாவட்டத்தில் 2013-ம் ஆண்டு விண்ணப்பித்த 253 பேருக்கு திருமண உதவித்தொகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். விசாரித்ததில், உதவித்தொகை பெறுவதற்காக சமர்ப்பித்த வருமானச் சான்றிதழில், மண்டல துணை வட்டாட்சியரின் கையொப்பம் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால், உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டது எனக் கூறுகிறார்கள். அது போலியான கையொப்பம் என்றும் கூறப்பட்டது.

அதற்கு பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிதான் கையொப்பம் போட்டுக் கொடுத்தார் என கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழிக் கடிதம் பெற்றுக் கொடுக்குமாறு கூறினார்கள். இப்படி தொடர்ச்சியாக அலைக்கழித்து வருகின்றனர். சர்ச்சைக்குரிய கையொப்பம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு நிர்வாகங்களுக்கு இடையேயான வேலை. ஆனால் இதையே காரணம் காட்டி 2 வருடங்களாக விண்ணப்பதாரரை அலைக்கழிப்பது சரியல்ல. சமூக நலத்துறையினரும் சரியான பதில் கொடுப்பதில்லை’ என்றார்.

இவரைப் போல் பாதிக்கப்பட்டோர் பலர், அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கோரிக்கையை தெரிவித்துவிட்டு அதற்கான பதிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிரச்சினை உண்மைதான்...

சமூக நலத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘இந்த குற்றச்சாட்டு உண்மைதான். 2013-ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாத காலகட்டத்தில், கோவையில் வருவாய்த்துறை கோப்புகளை சென்னையிலிருந்து வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது உதவித்தொகைக்கு விண்ணப்பித்திருந்தவர்களின் வருமானச் சான்றுகள் குறித்து ஆய்வு செய்தனர். அதில் இருந்த அதிகாரியின் கையொப்பம் தொடர்பாக விசாரித்து அந்த விண்ணப்பங்களுக்கான உதவித்தொகையை நிறுத்தி வைத்துவிட்டனர்.

அதிகாரியின் கையொப்பம் ஒன்று போல இல்லை. பல இடங்களில் மாறுபட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதில் வருவாய்த்துறை அரசுத்துறை சீல் உள்ளிட்டவை தெளிவாக உள்ளன. இந்த குழப்பம் தீர, சம்மந்தப்பட்ட அதிகாரிதான், கையொப்பம் போட்டுக் கொடுத்தார் என்ற உறுதிக் கடிதம் வாங்கிக் கொடுக்குமாறு விண்ணப்பதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் துறை ரீதியான பிரச்சினையில் அவர்கள் பாதிக்கப்படுவது ஏற்புடையதல்ல. இப் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x