Published : 09 Jan 2021 05:24 PM
Last Updated : 09 Jan 2021 05:24 PM

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு: மார்க்சிஸ்ட் கண்டனத் தீர்மானம்

சென்னை

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழுக் கூட்டம் இன்று (ஜனவரி 9) சென்னையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்புக்கு கண்டனம்

“இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரின்போது கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத் தூண் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்தச் செயல் அதிர்ச்சியளிக்கிறது. அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் இந்த இழிசெயலுக்கு துணைபோயுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இறுதிக்கட்டப் போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மையுள்ள விசாரணை நடத்தப்பட்டுத் தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால், முந்தைய ஆட்சியின்போதும், இப்போதைய ராஜபக்ச சகோதரர்கள் ஆட்சியின்போதும் இதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

மறுபுறத்தில் மாகாண கவுன்சில்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் அந்நாட்டு அரசியல் சட்டத்தைத் திருத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே, ஒப்புக் கொள்ளப்பட்ட உறுதிமொழிகளைக் கூட இலங்கை அரசு நிறைவேற்ற மறுக்கிறது. தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களைத் திரும்ப ஒப்படைப்பது, சிங்கள மொழிக்கு நிகராகத் தமிழைச் சமத்துவமாக நடத்துவது, மத, மொழி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படாமலேயே உள்ளன.

இந்திய வம்சாவளித் தமிழர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறிட ராஜ்ஜிய ரீதியிலான அழுத்தத்தை இந்திய அரசு தர வேண்டியது அவசியமாகும். ஆனால், இந்திய அயல்துறை அமைச்சரின் பேச்சுவார்த்தைகளில் இதற்கு போதிய அழுத்தம் தரப்பட்டதாகத் தெரியவில்லை. அதேபோல, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் அவ்வப்போது நடத்தி வரும் தாக்குதல்களை முற்றாக நிறுத்துவதற்கான உத்தரவாதமும் பெறப்படவில்லை.

இலங்கையில் இனியேனும் தமிழ் மக்கள் சமத்துவமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பு அங்குள்ள அரசுக்கு உள்ளது. அண்டை நாடு என்ற முறையிலும், அங்குள்ள அரசியல் சூழல் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலும், அதற்கான முன்முயற்சிகளில் இந்திய அரசும் ஈடுபட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x