Last Updated : 12 Oct, 2015 09:51 AM

 

Published : 12 Oct 2015 09:51 AM
Last Updated : 12 Oct 2015 09:51 AM

சோகத்தில் மூழ்கியது மனோரமா பிறந்த ஊரான மன்னார்குடி

நடிகை மனோரமா பிறந்த ஊரான மன்னார்குடியில், அவரது மறைவால் மக்கள் மிகுந்த சோகத்துக்குள்ளாகியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி அக்கரைத் தெரு என்றழைக் கப்படும் ஜெயங்கொண்டநாதர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காசி. இவரது முதல் மனைவி ராமாத்தாள். இவர்களது மகள் கோபிசாந்தா (எ) மனோரமா.

மனோரமா 10 மாத குழந்தையாக இருந்தபோது, குடும்பப் பிரச்சினையால் ராமாத்தாள் குழந்தையை அழைத்துக்கொண்டு, காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டில் வேலை செய்து, மனோரமாவைப் படிக்க வைத்துள்ளார்.

படிக்கும்போதே நாடகத்தில் நடித்து, பின்னர் சென்னைக்குச் சென்று படங்களில் நடித்த மனோரமா, தான் பிறந்த மண்ணை மறக்காமல் இருந்துள்ளார். அவர் பிறந்த வீடு தற்போது இடிக்கப்பட்டுவிட்டது. மனோரமாவின் அண்ணன்கள் ஆறுமுகம், கிட்டு ஆகியோர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, குலதெய்வமான மன்னார்குடி பாதாள வீரன் கோயிலுக்கு மனோரமா வந்துள்ளார். அக்கிராமத்தில் உள்ள சில உறவினர்களுடன் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

மனோரமாவுக்கு பத்ம விருது வழங்கியபோது, மன்னார்குடியில் பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தியுள்ளனர். அப்போதுதான், மனோரமா மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்பது பொதுமக்கள் பலருக்கும் தெரிந்துள்ளது என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.

மாலையிட்ட மங்கை…

முன்னாள் எம்எல்ஏ மன்னை மு.அம்பிகாபதி ‘தி இந்து’விடம் கூறும்போது, “மனோரமாவின் அண்ணன் கிட்டுவும், நானும் நாடகம் நடத்தி வந்தோம். 1957-ல் நடைபெற்ற தேர்தலில் திருக்கோஷ்டியூரில் கண்ணதாசன் போட்டியிட்டபோது, நான் அவருக்கு ஏஜன்டாக செயல்பட்டேன். தேர்த லில் கண்ணதாசன் தோல்வியைத் தழுவினார். பின்னர் அவர் சென்னை யில் படம் எடுக்கச் சென்றார். அங்கு ‘மாலையிட்ட மங்கை’ படத்தை தயாரித்தார்.

இந்நிலையில், கண்ணதாசன் என்னைக் கூப்பிட்டு, “உங்கள் ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் நடிக்க வந்துள்ளார்” என்றார். நான் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தேன். அப்போதுதான், எனது நண்பர் கிட்டுவின் தங்கை மனோரமா படத்தில் நடிப்பது தெரியவந்தது. உடனே, நான் கண்ணதாசனிடம் “மனோரமா எனது சொந்தகாரப் பெண்தான்” என்றேன். இதையடுத்து, மனோர மாவை படத்தில் நடிக்க வைத்த கண்ணதாசன், “ஹீரோயினாக நடித்தால் 3, 4 படங்களுக்குப் பிறகு காணாமல் போய்விடுவாய். உன்னிடம் திறமை உள்ளது. நகைச் சுவை நடிகையாக நடித்தால்தான் லைஃப் உண்டு” என்றார். இதை யடுத்து, மனோரமா நகைச்சுவை நடிகையாக நடித்தார்.

மனோரமாவுக்கு தேசப்பற்று அதிகம். இந்தியா-பாகிஸ்தான் போரின்போது, தனது நகைகளை யெல்லாம் கழற்றி, அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம் கொடுக்குமாறு தமிழக ஆளுநரிடம் வழங்கினார். மேலும், தமிழகம் முழுவதும் நாடகங்கள் நடித்து, நிதியைத் திரட்டிக் கொடுத்தார். மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் மனோரமா” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x