Published : 16 Oct 2015 01:51 PM
Last Updated : 16 Oct 2015 01:51 PM
போலீஸ் கண்காணிப்பு குறைந்து வருவதால் திருப்பத்தூரில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
வேலூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் திருப்பத்தூர் தாலுகா அமைந்துள்ளது. நகராட்சி அந்தஸ்து பெற்றுள்ள திருப்பத்தூரில் கடந்த 1911-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 100 ஏக்கர் இடத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கம், வட்டாட்சியர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், தீயணைப்புத்துறை, பொதுப் பணித்துறை, வேளாண்மைத்துறை, அரசு மருத்துவமனை, மாவட்ட வனத்துறை அலுவலகம், காவல் நிலையங்கள் என முக்கிய அரசு அலுவலகங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள திருப்பத் தூரில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந் திருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருப்பத்தூர் காவல் உட்கோட்டத்தில், திருப்பத்தூர் டவுன், திருப்பத்தூர் தாலுகா, ஜோலார்பேட்டை, கந்திலி, குரிசிலாப்பட்டு, ஏலகிரி, திருப்பத்தூர் அனைத்து மகளிர், திருப்பத்தூர் போக்குவரத்து என மொத்தம் 8 காவல் நிலையங்கள் உள்ளன.
இதில் போலீஸ் பற்றாக்குறையால் திருப்பத்தூரில் சட்டம் - ஒழுங்கு சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்பது கடந்த சில மாதங்களில் காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 10-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. அதிலும், கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் திருப்பத்தூரில் அடுத்தடுத்து 5 கொலைகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மாவட்ட எல்லைப்பகுதியில் திருப்பத்தூர் இருப்பதால் வெளிமாநில கொள்ளையர்கள் ஊடுருவல் அதிகமாக காணப்படுகிறது. இதனால், வீடு புகுந்து திருட்டு, கோயில் பூட்டு உடைத்து திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் கடந்த 6 மாதங்களில் அரை சதத்தை எட்டியுள்ளது. திருப்பத்தூர் பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு அலுவலங்கள் எதிரே நிறுத்தப்படும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த 6 மாதங்களில் திருடுப்போனதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இதுதவிர, ஏலகிரி, ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் நாடு,புதூர் நாடு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை, சாராயம் தயாரிப்பு போன்றவை அதிகரித்து வருகிறது. போதிய போலீஸார் இல்லாததால், சமூக விரோத செயல்கள், குற்ற நடவடிக்கைககள் திருப்பத்தூரில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் நக்சலைட்கள் பிடியில் சிக்கித் தவித்த திருப்பத்தூர் இப்போது, வெளிமாநில கொள்ளையர்கள் பிடியில் சிக்கி தவிக்கிறது. இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் தனியாக ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை. இரவு ரோந்து பணி, போலீஸ் பாதுகாப்பு போன்ற காவல் துறை செயல்பாடுகள் திருப்பத்தூரில் திருப்திகரமாக இல்லை. இதனால், ரவுடிகள் கொட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதை தடுக்க உரிய நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக போலீஸார் தரப்பில் விசாரித்தபோது, ‘‘திருப்பத்தூர் மக்கள் தொகை கணக்குபடி ஒரு காவல் நிலையத்தில் 50 போலீஸார் பணியாற்ற வேண்டும். ஆனால், திருப்பத்தூர் காவல் உட்கோட்டத்தில் உள்ள 8 காவல் நிலையங்களில் ஒற்றை இலக்கு எண்ணிக்கையிலேயே போலீஸார் பணி செய்து வருகின்றனர். பகல் நேரங்களில் காவல் நிலையங்களில் வேலை பார்ப்பவர்களையே, இரவு ரோந்து பணிக்கு வரவழைக்கிறோம். ஆட்கள் பற்றாக்குறையால் நகரில் பல இடங்களில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியவில்லை.
பொதுவாக, ஒவ்வொரு காவல் நிலையத்திலும், சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு என 2 வகையாக பிரிந்து போலீஸார் பணியாற்றுவர். போலீஸ் துறையில் ஏற்பட்டுள்ள ஆள்பற்றாக்குறையால், திருப்பத்தூர் காவல் உட்கோட்டத்தில் குற்றப்பிரிவு போலீஸார் என்றால் என்ன என்பதே தெரியாமல் உள்ளது. அனைத்து வேலைகளையும் இருப்பவர்களே பார்க்க வேண்டும். இது போன்ற பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், குற்றவாளிகளை கைது செய்வதில் தொடங்கி, சட்டம்- ஒழுங்கை நிலைநாட்டுவதில், போக்குவரத்து சிக்கலை தீர்ப்பதில் பெரும் தலைவலி ஏற்படுகிறது’’ என்றனர்.
திருப்பத்தூர் போக்குவரத்து துறையை பொருத்தமட்டில், சாலை விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடந்த 6 மாதங்களில் 3,444 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வட்டாரப் போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அபராதமாக கடந்த 6 மாதத்தில் 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக, திருப்பத்தூர் போக்குவரத்து ஆய்வாளர் கனி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT