Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

12.69 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை

தமிழகத்தில் 12 லட்சத்து 69 ஆயிரத்து 550 கட்டுமானத் தொழிலாளர்கள், ஓய்வூதியர்களுக்கு வேட்டி,புடவை அரிசி, பருப்பு, நெய் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று காலத்தில்தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தஅமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதியுதவி, நிவாரணப் பொருட்களை தமிழக அரசு வழங்கியது. அந்த வகையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 2 முறைதலா ரூ.1,000, 15 கிலோ அரிசி, ஒரு கிலோ எண்ணெய், ஒரு கிலோ பருப்பு அடங்கிய சிறப்பு நிவாரணத் தொகுப்பும் வழங்கப்பட்டது.

ரூ.94.40 கோடி நிதி ஒதுக்கீடு

இந்நிலையில், கட்டுமானத் தொழிலாளர்கள் தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அவர்களுக்கு முதல்முறையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 5 லட்சத்து94 ஆயிரத்து 147 ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி, அங்கவஸ்திரம், 6 லட்சத்து 75 ஆயிரத்து 403 பெண் தொழிலாளர்களுக்கு புடவை, 2 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சிறுபருப்பு, 500 கிராம் எண்ணெய், 100 கிராம் நெய், ஒரு கிலோ வெல்லம், 5 கிராம் ஏலக்காய், தலா 25 கிராம் முந்திரி மற்றும் திராட்சை ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க ரூ.94 கோடியே 40 லட்சம் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்து, 7 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பரிசுத் தொகுப்பை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நிலோஃபர் கபீல், தலைமைச் செயலர் கே.சண்முகம், தொழிலாளர் துறை செயலர் முகமது நசிமுதீன், தொழிலாளர் ஆணையர் எம்.வள்ளலார் ஆகியோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x