Published : 09 Jan 2021 03:11 AM
Last Updated : 09 Jan 2021 03:11 AM

நீதிமன்றத்தைக் காரணம்காட்டி விவாதத்திற்கு வர மறுக்கிறார் ஸ்டாலின்: பெருந்துறை பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு

பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமிக்கு, பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் வெள்ளிவேல் வழங்கினார்.

ஈரோடு

நீதிமன்றத்தைக் காரணம்காட்டி, சாக்குப்போக்கு சொல்லி விவாதத் திற்கு வர ஸ்டாலின் மறுக்கிறார், என பெருந்துறையில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

ஈரோடு மாவட்டத்தில் 6-ம் தேதி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதல்வர் பழனிசாமி, நேற்று முன்தினம் இரவு பெருந்துறையில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். பெருந்துறை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த முதல்வர் பழனிசாமிக்கு, தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பெருந்துறை பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

இப்பகுதி மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ரூ.1,650 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றியுள்ளோம். குடிநீர் தேவையைப் போக்க ரூ.227 கோடியில் கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெருந்துறையைச் சுற்றியுள்ள சாலைகள் நான்குவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்தல் அறிக்கையை ஜெயலலிதா பெருந்துறையில்தான் வெளியிட்டார்.

இத்தகைய திட்டங்களை மறைத்து திமுக தலைவர் ஸ்டாலின் பொய் அறிக்கை வெளியிட்டு வருகிறார். 1967-ல் அண்ணா முதல்வராக வர வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் வாக்களித்தனர். ஆட்சியில் இருந்தபோதே அவர் இறந்தார். அவர் இறப்புக்கு காரணம் யார்? அவர் இறந்த பின்னர் நெடுஞ்செழியன் தான் முதல்வராகி இருக்க வேண்டும். ஆனால், கருணாநிதி சதி செய்து ஆட்சிக்கு வந்தார். எனவே, நான் முதல்வரானது பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை.

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விவாதம் செய்ய ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தேன். நீதிமன்றத்தைக் காரணம்காட்டி, சாக்குப்போக்கு சொல்லி ஸ்டாலின் விவாதத்திற்கு வர மறுக்கிறார். நான் எனது உறவினர்களுக்கு அரசுப்பணிகளுக்கான டெண்டர் கொடுத்ததாக ஸ்டாலின் குற்றம்சாட்டு கிறார்.

நான் டெண்டர் கொடுத்ததாக கூறப்படும் உறவினருக்கு தி.மு.க. ஆட்சியிலேயே 8 டெண்டர்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி 1968-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, எந்தெந்த உறவு முறையினருக்கு டெண்டர் வழங்கக்கூடாது என்று கேட்டிருந்தார். அதன்படி கிடைத்த பதிலில் உள்ள எந்த உறவு முறையிலும் நான் டெண்டர் கொடுத்தது இல்லை என்பதை ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன், அதிமுக வர்த்தகர் அணி மாநிலச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x