Published : 09 Jan 2021 03:12 AM
Last Updated : 09 Jan 2021 03:12 AM

பொங்கல் பானைகளில் வர்ணம் தீட்டி, வருவாய் ஈட்டும் பட்டதாரி மாணவர்

மண் பாண்டங்களுக்கு வர்ணம் தீட்டும் முதுகலை மாணவர் க. அருணாசலம்

திருநெல்வேலி

திருநெல்வேலியில் பொங்கல் பானைகளில் வர்ணம் தீட்டி வருவாய் ஈட்டும் முதுகலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர் க. அருணாசலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார்.

திருநெல்வேலி மேலப்பாளை யம் குறிச்சி பகுதியைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர் கணேசனின் மகன் அருணாசலம். திருநெல்வேலி பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் எம்.காம். 2-ம் ஆண்டு படிக்கிறார். கல்லூரி படிப்புடன் மண்பாண்ட உற்பத்தியிலும் தனது தந்தைக்கு துணையாக ஈடுபட்டு வருகிறார்.

தற்போது பொங்கல் பண்டிகை காலம் என்பதால் சீர்வரிசையாக கொடுக்கும் பொங்கல்படி பானை களில் வர்ணம் தீட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

பள்ளிப் பருவத்தில் இருந்தே மண்பாண்ட உற்பத்தியில் தந்தைக்கு உறுதுணை புரிந்து வரும் அருணாசலம், தற்போது அக்கலையில் கைதேர்ந்தவராக உருவெடுத்துள்ளார்.

பொங்கல் பண்டிகை காலத்தில் சீர்வரிசை பானைகளில் ஆயில் பெயின்டால் வர்ணம் தீட்டுவது, கோடைக் காலத்தில் மண்பானைகளில் பைப்புகளை பொருத்துவது, கார்த்திகை சீஸனில் விளக்குகள் உற்பத்தியில் ஈடுபடுவது என்று கடந்த பல ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறார்.கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 8 மாதங்களாக கல்லூரிக்குச் செல்ல இயலாத நிலையில் சமீபத்தில்தான் முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. கல்லூரி செல்லாத காலங்களில் நேரத்தை வீணடிக்காமல் மண்பாண்ட தயாரிப்புக் கூடத்தில் மண்பாண்ட தயாரிப்பு பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டாலும், படிக்கிற நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் மண்பாண்டங்களை தயாரிக்க தனது தந்தைக்கு அவர் உதவு கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது, ‘‘பொழுதுபோக்காக இதை நான் செய்யவில்லை. எங்களது பாரம்பரிய தொழிலான இதிலிருந்துதான் எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. சிறு வயதிலிருந்தே மண்பாண்டம் தயாரிப்பில் ஆர்வம் கொண்டு தந்தையிடம் இருந்து பல்வேறு நுணுக்கங்களை கற்றுள்ளேன்.

பி.காம். படிப்பில் 62 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். எம்.காம். படிக்கும் அதேநேரத்தில் வங்கிப் பணி தேர்வுக்காகவும் பயிற்சி பெற்று வருகிறேன். முதுகலை படிப்புக்குப்பின் பணிக்கு சென்றாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் மண் பாண்டம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவேன்.

இப்பணியில் குறைந்த அளவுக்கே தொழிலாளர்கள் ஈடுபடுகிறார்கள். குறிச்சி பகுதியில் முன்பு 50 குடும்பங்களுக்கு மேல் மண்பாண்டம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இப்போது வெறும் 5 குடும்பங்கள் மட்டுமே இத்தொழிலை மேற்கொள்கின்றன. மண்பாண்ட ங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது’’ என்றார்.

“பொழுதுபோக்காக இதை நான் செய்யவில்லை. எங்களது பாரம்பரிய தொழிலான இதிலிருந்துதான் எங்களுக்கு வருமானம் கிடைக்கிறது” என்கிறார் அருணாசலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x