Published : 12 Oct 2015 09:54 AM
Last Updated : 12 Oct 2015 09:54 AM
திருநின்றவூர் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே ஒரு நடைமேம்பாலம் உள்ள நிலையில், ரூ.1.13 கோடி செலவில் மேலும் ஒரு நடைமேம்பாலம் கட்ட ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது. சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை-திருவள்ளூர் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது திருநின்றவூர் ரயில் நிலையம். இப்பகுதியில், தனியார் தொழிற் சாலைகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் புராதனக் கோயில்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட தேவைகளுக்காக சென்னை உள்ளிட்ட பிற இடங்களுக்கு வந்து செல்கின்றனர். இதனால், திருநின்றவூர் ரயில் நிலையத்தை தினந்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர்.
திருநின்றவூர் கிராமத்துக்கும், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலைக்கும் இடையே இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதனால், இருபக்கமும் வசிக்கும் மக்கள் ரயில் நிலையத்தைக் கடந்துதான் பிறபகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது.
தற்போது, இந்த ரயில் நிலையத்தை கடந்து செல்வதற்கு நடைமேம்பாலம் உள்ளது. முதிய வர்கள், பெண்கள், நோயாளிகள் இதில் ஏறி செல்ல சிரமப்படுவதால் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் இக்கோரிக்கையை நிராகரித்து விட்டு மேலும் ஒரு நடைமேம்பாலத்தை கட்ட நிதி ஒதுக்கி உள்ளது.
இதுகுறித்து, திருநின்றவூர் ரயில் பயணிகள் பொதுநலச் சங்கத்தின் செயலாளர் எஸ்.முருகையன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: திருநின்றவூர் ரயில் நிலையத்தில் தற்போதுள்ள நடைமேம்பாலத்தை அடைய நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதிக உயரம் காரணமாக நடைமேம்பாலத்தில் ஏறி செல்ல முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில் நிலையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பயணச்சீட்டு வாங்குவதற்கு, பயணிகள் ரயில் தண்டவாளத்தைக் கடந்தோ அல்லது இந்த உயரமான பாலத்தின் மீது ஏறியோ, 3-வது நடைமேடையில் உள்ள பயணச்சீட்டு அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
எனவே, பொதுமக்களின் வசதிக்காக சிடிஎச் சாலையையும், திருநின்றவூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கக்கோரி ரயில்வே அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் தற்போது ரூ.1.13 கோடி செலவில் புதிதாக ஒரு நடைமேம்பாலத்தை கட்ட டெண்டர் விட்டுள்ளது.
இதனிடையே, மண்டல ரயில்வே மேலாளர் சமீபத்தில் திருநின்றவூர் ரயில் நிலையத்துக்கு ஆய்வுக்கு வந்தார். அப்போது அவரிடம் இதுபற்றி கேட்டதற்கு புதிதாக கட்டப்பட உள்ள நடைமேம்பாலத்தின் மீது டிக்கெட் கவுன்ட்டர் அமைக்கப்பட உள்ளது. எனவே, பயணிகள் எளிதாக டிக்கெட் எடுத்து செல்லலாம் எனக் கூறினார். உண்மையில், இப்புதிய நடைமேம்பாலத்தால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று முருகையன் கூறினார்.
இதுகுறித்து, ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, திருநின்றவூர் ரயில் நிலையத்தில் தற்போதுள்ள நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும், அது சேதமடைந்துள்ளதால் நடைமேம்பாலத்தை மாற்றும் வகையில் புதிய நடைமேம்பாலம் கட்ட தீர்மானித்துள்ளோம். அவ்வாறு கட்டப்படும் மேம்பாலம் பயணிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் அமையும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT