Published : 08 Jan 2021 07:27 PM
Last Updated : 08 Jan 2021 07:27 PM

முதுநிலை சட்டக் கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு; இந்திய பார் கவுன்சில் திரும்பப் பெற வேண்டும்: ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

முதுநிலை சட்டக் கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு என்ற அரசிதழ் அறிவிப்பினை இந்திய பார் கவுன்சில் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.08) வெளியிட்ட அறிக்கை:

"முதுநிலை சட்டப் படிப்புக்கு (எல்எல்எம்) இனிமேல் நீட் தேர்வு போன்று அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என இந்திய பார் கவுன்சில் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைப் பறித்து விட்ட மத்திய பாஜக அரசு இப்போது, 'இந்திய பார் கவுன்சில்' மூலமாகச் சட்டக் கல்வியையும் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக் கனியாக்கி விலக்கி வைக்கும் விதத்தில் இந்தத் தேர்வினை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து, அதற்காக அரசிதழும் வெளியிட்டிருப்பது மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது.

முதுநிலை சட்டப் படிப்பை இரண்டு ஆண்டுகளாக்கி, ஓராண்டு எல்எல்எம் ஒழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அறிவிப்புகளுமே சட்டம் பயின்ற பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்கள் யாரும் சட்ட மேற்படிப்புக்குச் சென்று விடக்கூடாது என்ற உள்நோக்கம் கொண்டதோ என்ற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.

நீட் போன்ற இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு, எல்எல்பிக்கும், அதாவது, சட்டப் படிப்புக்கும் கொண்டு வருவதற்கான முன்னோட்டம் போலவே இந்த அறிவிப்பு தெரிகிறது. சட்டப் படிப்பிலும் சமூக நீதியைப் பறிக்கும் முதுநிலைச் சட்டக் கல்விக்கான இந்த அகில இந்திய நுழைவுத் தேர்வு மிகுந்த கண்டனத்திற்குரியது.

அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்குப் பதில், இது மாதிரி 'நுழைவுத் தேர்வு' என்று கூறி, அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களை மேலும் நிந்திப்பது, 'சமவாய்ப்பு' வழங்குதல் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டுக்கு முற்றிலும் விரோதமானதாகும்.

எனவே, மாநில உரிமைகளுக்கு விரோதமாக, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும் 'முதுநிலை சட்டக் கல்விக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு' என்று மாநில அரசுகளைக் கலந்து ஆலோசித்து கருத்து அறியாமல், வெளியிடப்பட்டுள்ள இந்த அரசிதழ் அறிவிப்பினை இந்திய பார் கவுன்சில் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஏழை, எளிய நடுத்தர மாணவர்களும் சட்டக் கல்வி பெறும் வகையில், அரசு சட்டக் கல்லூரிகளின் தரத்தை உயர்த்துவதற்கு மாநில அரசுகளுக்கு மத்திய பாஜக அரசு உதவிட முன்வந்திட வேண்டும் என்றும் திமுகவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x