Published : 08 Jan 2021 07:18 PM
Last Updated : 08 Jan 2021 07:18 PM
தொடர் தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள ஏதுவாக, ஆண்டுதோறும் தொடரும் செலவினமாக ரூ.2 கோடியினை ரூ.3 கோடியாக உயர்த்தி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜன.08) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"தமிழ்நாட்டின் கலாச்சார மரபினை வெளிக்கொணரும் வகையில் தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தொடர் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகளைத் தேவைக்கு ஏற்ப பெரிய அல்லது சிறிய அளவுகளில் ஒவ்வொரு ஆண்டும் பழங்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம், வரலாற்றுத் தொடக்கக் காலம், கடல் சார் தொல்லியல் ஆராய்ச்சிகள், வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு மண்டலங்களிலும் உள்ள தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2020-2021ஆம் ஆண்டுக்கான கலை மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது தொல்லியல் துறை சார்பாக தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் பின்வரும் அறிவிப்பினை அறிவித்தார்:
'தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு ஆய்வு நடத்துவதன் மூலம், தமிழ்நாட்டின் சிறந்த பண்பாட்டு மரபினை அனைத்து மக்களுக்கும் வெளிச்சமிட்டுக் காட்ட இயலும் என்ற வகையில் முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள ஏதுவாக, ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் தொடரும் செலவினமான ரூ.2 கோடியினை உயர்த்தி ரூ.3 கோடியாக இந்நிதியாண்டு முதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்'
தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சரின் அறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு, தமிழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு முறையான தொடர் தொல்லியல் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொள்ள ஏதுவாக, ஆண்டுதோறும் தொடரும் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும் ரூ.2 கோடியினை ரூ.3 கோடியாக உயர்த்தி தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT