Published : 08 Jan 2021 06:09 PM
Last Updated : 08 Jan 2021 06:09 PM

பொங்கல் பண்டிகை; 16,221 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 16 ஆயிரத்து 221 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது, சென்னையிலிருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், பண்டிகை முடிந்ததும் மீண்டும் சென்னைக்கு வருவதற்காகவும் தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கும்.

அதன்படி இந்த ஆண்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம்

இது தொடர்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநர் இன்று (ஜன. 08) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தினசரி இயக்கக்கூடிய 2,050 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளாக 4,078 பேருந்துகள் என, மூன்று நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக, சென்னையிலிருந்து வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல வரும் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 10 ஆயிரத்து 228 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 5,993 பேருந்துகளும் என, மொத்தமாக 16 ஆயிரத்து 221 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோன்று, பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களிலிருந்து சென்னைக்குத் திரும்புவதற்காக தினசரி இயக்கப்படும் 2,050 பேருந்துகளுடன் 3,393 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 5,727 சிறப்புப் பேருந்துகள் என, 15 ஆயிரத்து 270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதற்கென சென்னையில் 5 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் பேருந்து நிலையங்கள் குறித்த விவரம்

வழித்தட மாற்றம்

முன்பதிவு செய்துள்ள பேருந்துகள் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் கோயம்பேட்டிலிருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்கள்

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுகுன்றம் - செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானட்டோரியம் பேருந்து நிலையத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு மையம் என, 13 மையங்கள் செயல்படும்.

முன்பதிவு வசதி

முன் பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதள வசதியான d www.tnstc.in, tnstc official app, www.redbus.in, www.paytm.com மற்றும் www.busindia.com போன்ற இனையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பயணிகளின் வசதிக்காக 24*7 கட்டுப்பாட்டு அறை

மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை (24*7) மணி நேரமும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை (Toll Free Number) தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room) 24 மணி நேரமும் செயல்படும்.

பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் (May I Help You) அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு, நோய் தொற்று காலத்தில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள்

பொதுமக்களின் வசதிக்காக புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x