Published : 08 Jan 2021 04:39 PM
Last Updated : 08 Jan 2021 04:39 PM
தூத்துக்குடி அருகே முத்தையாபுரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டிப் பந்தயத்தில், அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மாட்டுவண்டிகள் பரிசுகளை வென்றன.
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் ஊமைத்துரை தொண்டர்படை சார்பில் தூத்துக்குடி அருகே முத்தையாபுரம்- துறைமுகச் சாலையில் இன்று மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டிகளை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பெரிய மாட்டுவண்டி, சிறிய மாட்டு வண்டி என 2 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டுவண்டிப் போட்டிக்கு 10 மைல் தொலைவும், சிறிய மாட்டுவண்டிப் போட்டிக்கு 6 மைல் தொலைவும் சென்று திரும்பும் வகையில் பந்தய தூரம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
பெரிய மாட்டுவண்டிப் போட்டியில், அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மாட்டுவண்டி முதலிடத்தையும், ஜக்கம்மாள்புரம் தாவிது மாட்டுவண்டி இரண்டாம் இடத்தையும், நாலந்தாவைச் சேர்ந்த மாகாவிஷ்ணு மாட்டுவண்டி மூன்றாவது பரிசையும் பெற்றன. சிறிய மாட்டுவண்டிப் போட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் மாட்டுவண்டி முதலிடத்தையும், பாளையங்கோட்டை டேவிட்பாண்டியன் மாட்டுவண்டி இரண்டாவது இடத்தையும், தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி மாட்டுவண்டி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகளை வழங்கினார். போட்டிகளைக் காண்பதற்காகச் சாலையில் இருபக்கங்களிலும் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். ஏற்பாடுகளை ஊமைத்துரை தொண்டர்படை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT