Published : 08 Jan 2021 03:15 PM
Last Updated : 08 Jan 2021 03:15 PM
பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இணக்கமான சூழ்நிலை, நல்லுறவை ஏற்படுத்தத் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வுக் காவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்கற்குளம் கிராமத்தில் கிராம விழிப்புணர்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பேசும்போது, காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் எனவும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கிராம விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு காவல் நிலையத்தில் இருந்தும் கிராம விழிப்புணர்வு காவல்துறை அதிகாரியாக ஒவ்வொரு காவலர்களை நியமித்துள்ளோம்.
கிராமத்தில் சட்ட ஒழுங்குப் பிரச்சினைகள் ஏதாவது இருந்தால், அதைக் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளருக்குத் தெரியப்படுத்தி அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாக அந்த அதிகாரி நடவடிக்கை எடுப்பார். அதுபோலப் பேருந்து வசதி, வேலைவாய்ப்பு போன்றவை தொடர்பாகவும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறைக்கும், பொதுமக்களுக்கும் ஓர் இணக்கமான நல்ல சூழல் உருவாக வேண்டும். காவல்துறை உங்களுக்காக எப்போதும் உழைக்கத் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.
ஒளிரும் ஸ்டிக்கர்
இதைத் தொடர்ந்து செய்துங்கநல்லூர் சோதனைச் சாவடியில், பாத யாத்திரையாகத் திருச்செந்தூர் கோயிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு, விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பக்தர்களின் கை மணிக்கட்டுப் பகுதி, சட்டையின் முதுகுப் பகுதி மற்றும் தோள் பைகள் போன்றவற்றில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
அப்போது பாத யாத்திரையாகத் திருச்செந்தூர் நோக்கி நடந்துசென்ற பக்தர்களிடம், சாலையில் வலது பக்கம் நடந்து செல்ல வேண்டும், போக்குவரத்து விதிகளை மதித்து, பாதுகாப்பாகச் சாலையில் நடந்து செல்ல வேண்டும் என அறிவுரை கூறினார்.
நிகழ்ச்சிகளில் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன், செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் ராஜ சுந்தர், ஆழ்வார்கற்குளம் ஊராட்சித் தலைவர் முத்துக்குமாரி, ஊர்த் தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT