Published : 08 Jan 2021 06:53 AM
Last Updated : 08 Jan 2021 06:53 AM

பாகனுடன் பேசும் ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள்

திருச்சி

பூலோக வைகுண்டம், 108வைணவ திவ்யதேசத் தலங்களில் முதன்மையானது என்று போற்றப்படும் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் உள்ள மூலவரான ரங்கநாதர், உற்சவரான நம்பெருமாள் ஆகியோருக்கு ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த கோயிலில் உற்சவங்கள் மற்றும் பெருமாள், தாயார்புறப்பாடுகளுக்கு ஆண்டாள் என்ற பெண் யானை பயன்படுத்தப்படுகிறது. தற்போது 42 வயதாகும் ஆண்டாள் யானை மிகவும் புத்திசாலித்தனமானது. இந்த யானை ரங்கம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டபோது அதற்கு வயது 8. இந்த யானை 35 ஆண்டுகளாக ரங்கம் கோயிலில் பெருமாள் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 7 ஆண்டுகளாக ஆண்டாளை பராமரித்து வரும் யானைப் பாகன் கே.ராஜேஷ் மலையாளத்திலும், தமிழிலும் கேட்கும் கேள்விகளுக்கு ஆண்டாள் யானை சப்தம் எழுப்பியும்,தலையை ஆட்டியும் குழந்தையைப்போல பதில் சொல்வது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

இதுகுறித்து யானைப் பாகன் ராஜேஷ் ‘இந்து தமிழ்’நாளிதழிடம் கூறியது: எங்கள்குடும்பத்தில் 3-வது தலைமுறையாக நான் இந்த யானையை பராமரித்து வருகிறேன். கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறும் நாட்களில் அதிகாலை 3 மணிக்கு நானும், ஆண்டாளும் எழுந்து தயாராகி விடுவோம். கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்றுதீர்த்தம் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வருவோம். அதிகாலையில் பெருமாள் ஆண்டாளுக்குதான் முதல் தரிசனம் தருவார். முதல் பிரசாதமும் ஆண்டாளுக்குதான்.

கோயில் ஊழியர்களும், ஊர்மக்களும் ஆண்டாளை அஃறிணைஉயிரினமாக பார்ப்பதில்லை. உயர்திணையாகவே ஆண்டாள் எங்கே, எப்படி இருக்கிறாள் என்றுதான் விளிப்பார்கள். அந்த அளவுக்கு கோயிலுக்கும், பக்தர்களுக்கும் ஆண்டாள் செல்லப்பிள்ளை.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நான் கேட்கும் கேள்விகளுக்கு ஆண்டாள் புரிந்து கொண்டு சிறு சப்தம் மூலமாக பதிலளிப்பதை கண்டேன். அதன்பின்னர் தினந்தோறும் அவளிடம் நிறைய பேசுவேன்.

“ஆண்டாள் சமத்து தானே என்றால், உம் என சப்தம் எழுப்புவாள். எங்கே போகனும் என்றால், தும்பிக்கையால் வெளியேசெல்ல வேண்டும் என காட்டுவாள். சாப்பிட்டாயா என்றால், உம் என சப்தம் எழுப்புவாள், தலையையும் ஆட்டுவாள். மேலும், துதிக்கை மூலம் மவுத்ஆர்கனை அழகாக வாசிப்பாள்.

கோயில் வழக்கங்கள் அனைத்தும் ஆண்டாளுக்கு அத்துப்படி. எனது கட்டளையை எதிர்பாராமலேயே அனைத்தையும் சரியாக செய்வாள். ஆண்டாளுக்கு தற்போது கோயில் உள்ளே தனியாக பிரம்மாண்ட கொட்டகை கட்டப்பட்டு, பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதனால்,குஷியாக இருக்கிறாள் ஆண்டாள்.பெரிய உருவம் கொண்டதாக இருந்தாலும், அவளது குணத்தாலும், பழகும் விதத்தாலும் இன்னும் அவள் எனக்கு 5 வயதான நல்ல மனதுள்ள சமத்து குழந்தையே.

ஒரு இடத்தில் இருக்கும்போது அங்கு சூழல் சரியில்லை, பிடிக்கவில்லை எனில், கிளம்பலாம் என சிக்னல் கொடுப்பாள். உடனடியாக அங்கிருந்து கிளம்பி விடுவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x