Published : 07 Jan 2021 10:44 PM
Last Updated : 07 Jan 2021 10:44 PM
வாக்களித்த மக்களுக்கும், தகுதியற்ற இந்த நபர்களை பொதுவாழ்வில் அடையாளம் காட்டிய ஜெயலலிதாவிற்கும் துரோகம் இழைத்தவர்கள் அதிமுக அமைச்சர்கள் என மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 84 பகுதியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் தலைமை வகித்து உரை நிகழ்த்திய மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன்.
மதுரை மாநகராட்சியில் மட்டும் ஆண்டுதோறும் 2500 கோடி ரூபாய்க்கு வரவு செலவு நடைபெறுகிறது .இவை போக 1280 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிடம் ஆலோசிக்காமல் ஊழலுக்காக மட்டுமே நடத்தப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி நன்றாக இருந்த பேவர் பிளாக் கற்களை அகற்றி கருங்கல் பதிப்பதாகச் சொல்லி அலங்கோலப்படுத்தி விட்டார்கள். கீழ ஆவணி மூல வீதியில் மழை பெய்தால் மக்கள் படகு ஓட்ட வேண்டிய நிலை இருக்கிறது .மாநகரின் நடுவில் குளத்தை அமைப்பது தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் லட்சணமா என கேள்வி எழுப்பினார்
கல்வியறிவு ,வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள் குறித்த புரிதல் இல்லாத வட நாட்டவர்களால் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது .ஏற்கனவே பண மதிப்பிழப்பு ,ஜி எஸ் டி என மக்களுக்கு இன்னல் ஏற்படுத்தியவர்கள் தற்போது புதிது புதிதாக குடியுரிமை சட்டம் ,370 என குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.
மேலும் பாகிஸ்தான் ,சீனா பெயர்களை சொல்வது மற்றும் கோவில் கட்டும் வேலையைச் செய்வதாகக் கூறி ஏமாற்றி வருகிறார்கள் .இந்த சர்வாதிகார ஆட்சியை நூறாண்டு காலம் சுயமரியாதை அறிந்த தமிழர்கள் ஏற்கவில்லை.
அதனால் தான் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது அம்மையார் ஜெயலலிதா மோடியா லேடியா என கேட்டார் அதன் பிறகு 2016 ல் 1 .1 சதவிகித வித்யாசத்தில் அதிமுகவிற்கு வெற்றியும் கிடைத்தது.
ஆனால் 6 மாதங்களில் ஜெயலலிதா மறைந்துவிட்டார் .அதற்குப் பிறகு ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர்கள் டேடி டேடி என மத்தியில் உள்ளவர்களுக்கு அடிமையாகி தமிழகத்தை சீரழித்து விட்டார்கள் .
எங்கேயோ ஒரு மூலையில் இருந்து கொண்டு இருந்தவர்களுக்கு வாழ்வளித்து பொது வாழ்விற்கு அடையாளம் காட்டிய ஜெயலலிதா எந்த திட்டத்தை எல்லாம் வேண்டாம் என சொன்னார்களோ நீட் ,உதய் மின் திட்டம் ,ஜி எஸ் டி என அத்தனைக்கும் கையெழுத்து போட்டு அதிமுக அமைச்சர்கள் துரோகம் செய்து விட்டார்கள் கடன் தொகையை 5 லட்சம் கோடியாக ஏற்றி தமிழக கஜானாவை திவாலாக்கி விட்ட இவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்த போது உதவிட சொன்ன கொரோனா கால கட்டத்தில் எந்த உதவியும் செய்திடாமல் தற்போது கடன் வாங்கி அதற்கான வட்டியையும் தமிழக மக்களின் மீது வைத்து விட்டு ஏதோ அதிமுக பொங்கல் பரிசு 2500 கொடுப்பது போல ஸ்டிக்கர் ஒட்டியும் பேனர் வைத்தும் தேர்தல் நேரத்தில் விளம்பரம் தேடுகிறார்கள் என்னைப்பொறுத்தவரை தனி நபர் சார்ந்த விமர்சனத்தை அவதூறாக நான் முன் வைப்பதில்லை அதனால் தான் சட்டமன்றத்தில் கூட ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட என் கருத்தை வரவேற்கும் சூழ்நிலை இருக்கும்
எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் செய்திடாத வகையில் 136 திட்டப்பணிகளை தொகுதியில் நிறைவேற்றி தந்து இருக்கிறேன்.39 போர்வெல்கள் .9 அங்கன்வாடிகள் ,4 ரேஷன் கடைகள் .6 பள்ளி கட்டிடங்கள் ,பயணியர் நிழற்குடை என பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றி தந்துள்ளேன்.எம் எல் ஏ நிதியில் முதன் முறையாக முத்து சாரதா ஸ்கேன் மையத்தில் நான் தொடங்கி வாய்த்த டாப்ளர் ஸ்கேன் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திட இயலாத வகையில் செல்லும் வழியில் பள்ளம் தோண்டி வைத்துள்ளார்கள் .
எனது தந்தையார் 2006 ஆம் ஆண்டு தேர்தலில் நின்ற போது நான் செய்து வந்த பணியில் மிக கடினமான சூழ்நிலையில் விடுமுறை எடுத்து வந்து தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டேன்.ஆனால் அவர் வென்ற பிறகு அமைச்சராக ஒரு நாள் கூட பார்க்க இயற்கை இடம் தர வில்லை என உருக்கத்தோடு குறிப்பிட்டார் .அவருக்கு கிடைத்த பெரு வாய்ப்பு அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதெல்லாம் திமுக ஆட்சியில் இருந்தது .எனவே தான் மதுரைக்கு பல்வேறு திட்டப்பணிகளை பாலங்கள் ,மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ,மத்திய காய்கறி அங்காடி மாற்றம் ,சுற்றுச்சாலை,உயர்நீதிமன்றம் என கொண்டு வந்தார் .அந்த வகையில் மக்க்களின் எண்ணங்களுக்கு ஏற்ப ஆட்சி அமைந்திட உள்ளது .ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டிய கடமை உங்களின் கைகளில் உள்ளது திமுக தலைவர் தளபதியாரின் ஆட்சியில் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் இன்னும் சிறப்பாக பணியாற்றுவேன் என நம்பிக்கை உள்ளது என பேசினார்.பகுதி திமுக செயலாளர் சரவண பாண்டியன் ,வட்ட செயலாளர் அசோக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT