Published : 07 Jan 2021 06:33 PM
Last Updated : 07 Jan 2021 06:33 PM
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி திட்டம் ஒத்திகை நாளை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
கரோனா தடுப்பூசி திட்டத்துக்கும், அதைச் செயல்படுத்துவதற்கும் இடையிலான சவால்களைக் கண்டறியும் பொருட்டு தென்காசி மாவட்டத்தில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை, செங்கோட்டை அரசு மருத்துவமனை, தென்காசி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சொக்கம்பட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தென்காசி சாந்தி மருத்துவமனை ஆகிய 5 இடங்களில் 8-ம் தேதி (நாளை) தடுப்பூசி திட்டத்துக்கான ஒத்திகை நடைபெற உள்ளது.
தடுப்பூசி திட்டத்துக்கும், கள சூழலில் அதைச் செயல்படுத்துவதற்கும் இடையிலான நடைமுறைகளை சோதனை செய்வது மற்றும் சவால்களை அடையாளம் காண்பது ஆகியவையே இந்த ஒத்திகையின் முக்கிய நோக்கமாகும். மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்டதையடுத்து பாதகமான நிகழ்வுகள் ஏதேனும் நிகழ்வுற்றால் அதை கையாள்வதில் கூடுதல் கவனம் செலுத்துவதும் இதன் நோக்கமாகும்.
இதற்கு போதுமான காற்றோட்டமான இடவசதி, மின்சாரம், பாதுகாப்பு போன்றவற்றுக்கான அனைத்து முன்மொழியப்பட்ட ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
இந்த தடுப்பூசி ஒத்திகை பணியில் தடுப்பூசி செலுத்துபவர் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஒத்திகைக்கு தேவையான மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் விவரங்கள் COWIN செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பயனாளிகள் தடுப்பூசியை எங்கே, எந்த இடத்தில் பெற வேண்டும் என்ற விவரங்கள் அவர்களின் கைப்பேசிக்கு செயலியின் மூலம் குறுந்தகவல் சென்றடையும். மேலும், அவர்கள் தடுப்பூசி பெற்றபின் தடுப்பூசி பெற்ற விவரங்கள் அடங்கிய சான்றிதழ்களை செயலியின் மூலம் பெறுவர்.
இதனை தொடர்ந்து நான்கு கட்டமாக தடுப்பூசி பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அனைத்து மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக கரோனா தடுப்பு பணியில் முன்னிலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களும், நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT