Published : 07 Jan 2021 03:57 PM
Last Updated : 07 Jan 2021 03:57 PM

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கி வைக்க முதல்வர், துணை முதல்வர் வருகை: உறுதி செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 

மதுரை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர், துணை முதல்வர் நேரில் வந்து தொடங்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்துவது குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர், துணை முதல்வர் நேரில் தொடங்கி வைக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

பொங்கலையொட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் வரும் 14, 15, 16 தேதிகளில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், உள்ளூர் விழா கமிட்டிக்குழுவுடன் இணைந்து செய்து வருகிறது. போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு கரோனா பரிசோதனை முகாம் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பதிவு 11-ம் தேதி தொடங்குகிறது. போட்டியில் குறைந்த காளைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுவதால் தமிழகம் முழுவதும் இருந்து மதுரை ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க காளை உரிமையாளர்கள் தற்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் இடத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று ஆய்வு செய்தனர். அவருடன் மாவட்ட ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட எஸ்.பி., சுஜித் குமார் மற்றும் மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது கரோனோ பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது. 50 சதவீத பார்வையாளர்களை கரோனோ பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு அனுமதிப்பது, தனிமனித இடைவெளியுடன் பார்வையாளர்களுக்கான கேலரி அமைப்பது போன்ற நடைமுறைகள் குறித்தும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.

அதன்பின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் 16-ம் தேதி அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வரும், துணை முதல்வரும் தொடங்கி வைக்க உள்ளனர். போட்டியை நேரில் தொடங்கி வைத்துவிட்டு போட்டியை முதல்வரும் துணை முதல்வரும் நேரில் காண்பார்கள்.

ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், உதவியாளர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்படும் முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களில் கரோனா பரிசோதனை செய்து சான்றிதழ்களைப் பெற்று வரலாம்.

போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கரோனோ பரிசோதனை ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. தனிமனித இடைவெளியுடன் பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைக்க விழாக் குழுவினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வீரத் தமிழர்களின் அடையாளமாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை கரோனோ பெருந்தொற்று காலத்தில் தடைப்படாமல் மருத்துவக் குழுவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி போட்டிகள் நடத்தப்படும்.

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முறையாக நடத்துவதை உறுதி செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x