Published : 07 Jan 2021 03:11 PM
Last Updated : 07 Jan 2021 03:11 PM
பொள்ளாச்சி சம்பவத்தை அதிமுக அரசு மூடி மறைக்க முயற்சி செய்து வருவதாக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்த அவரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பெ.கீதாஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர்.
தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்க கனிமொழி எம்.பி அளித்த பேட்டி:
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி சம்பவத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் ஈடுபட்டுள்ள நிலையில், அதிமுக தொடர்ந்து அந்த சம்பவத்தை மூடி மறைக்கவே தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
திமுகவின் தொடர் அழுத்தத்தின் காரணமாக அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும்.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில்கூட ரூ.60 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கபட்டுள்ளதாக தமிழக முதல்வர் தொடர்ந்து கூறி வருகிறார்.
முதலீடு வரட்டும், நல்லது தான். ஆனால், என்னென்ன முதலீடுகள் வந்துள்ளன, எந்தெந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அதிமுகவினர் தோல்வி பயத்தின் காரணமாக திமுக நடத்தும் கிராமசபை கூட்டங்களை விமர்சித்து வருகின்றனர். திமுக நடத்தும் கிராமசபை கூட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
இவ்வாறு கனிமொழி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT